ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏப்ரல் 7-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட இருக்கும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
விராட் கோலி நிகழ்த்த இருக்கும் மாபெரும் சாதனை :
அந்த வகையில் விராட் கோலி படைக்க போகும் சாதனை யாதெனில் : எதிர்வரும் இந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 17 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை குவித்த முதல் வீரராகவும், உலகளவில் ஐந்தாவது வீரராகவும் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இமாச்சலப் பிரதேஷ் அணிக்கு எதிராக டெல்லி அணியில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 402 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 9 சதம் மற்றும் 98 அரைசதம் என அவர் 12983 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் அவர் 17 ரன்களை குவிக்கும் பட்சத்தில் அவர் 13000 ரன்களை பூர்த்தி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக 255 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8101 ரன்களை குவித்துள்ளார். அதோடு சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக 15 போட்டியில் விளையாடியுள்ள அவர் 424 ரன்களை குவித்துள்ளார்.
அதுதவிர்த்து இந்திய அணிக்காக 125 போட்டிகளில் விளையாடியுள்ள அவ0ர் 4188 ரன்களை குவித்துள்ளார். அதோடு டெல்லி மாநில அணிக்காக 7 போட்டிகளில் 270 ரன்களை குவித்துள்ளார். இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து டி20 கரியரையும் சேர்த்து அவர் இந்த சாதனையை நெருங்க உள்ளார்.
இதையும் படிங்க : தோனி இல்ல.. சென்னை அணியின் மோசமான தோல்விகளுக்கு காரணம் இதுதான் – வாசிம் ஜாபர் கருத்து
இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயில், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைரன் பொல்லார்டு ஆகியோர் 13000 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



