ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆட்டமிழக்காமல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 30-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
லாராவை முந்த காத்திருக்கும் விராட் கோலி :
கடந்த சில தொடர்களாகவே ரன் குவிக்க தடுமாறி வந்த விராட் கோலியின் மீது விமர்சனங்கள் இருந்து வந்த வேளையில் இந்த டெஸ்ட் சதத்தின் மூலம் அவர் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இனிவரும் போட்டிகளிலும் அவர் அசத்துவார் என்ற நம்பிக்கையை தற்போது விராட் கோலி பதித்துள்ளார்.
ஏற்கனவே விராட் கோலி இந்த ஆஸ்திரேலியா தொடரில் சாதிப்பார் என்று பலரும் கூறி வந்த வேளையில் இந்த தொடரை அவர் சதத்துடன் சிறப்பாக ஆரம்பித்தது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முக்கிய சில சாதனைகளை படைக்க காத்திருக்கிறார்.
அந்த வகையில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 277 ரன்கள் குவித்துள்ளார். மேலும் எதிர்வரும் இந்த டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் குறிக்கும் பட்சத்தில் பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
அதோடு போட்டி நடைபெறும் இந்த குறிப்பிட்ட அடிலெய்டு மைதானத்தில் வெளிநாட்டு வீரர்களாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் 611 ரன்களுடன் முதலிடத்தில் பிரைன் லாரா உள்ளார். அதே போன்று விவியன் ரிச்சர்ட்ஸ் 552 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்.. இரண்டாவது போட்டியில் இருந்து விலகிய ஆஸி வீரர் – விவரம் இதோ
அவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி தற்போது 509 ரன்கள் குவித்துள்ள பட்சத்தில் எதிர்வரும் இந்த டெஸ்ட் போட்டியில் 102 ரன்கள் அடித்தால் பிரைன் லாராவையும், 44 ரன்கள் அடித்தால் விவ் ரிச்சர்ட்ஸ்ஸையும் தாண்ட முடியும். நிச்சயம் அந்த சாதனையை அவர் இந்த போட்டியில் படைப்பார் என்று நம்பலாம்.