
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் முன்னிலை வகித்திருந்த நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 164 ரன்கள் குவிக்க 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பாக ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி துவக்கத்திலேயே ராகுலின் விக்கெட்டை பறிகொடுத்தது.
அதன் பிறகு இஷான் கிஷன் மற்றும் கேப்டன் விராத் கோலி ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி 18 ஓவர்களில் ரன் இலக்கை எட்டியது. துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் என 56 ரன்களை குவித்தார். அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் விராட்கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி சிக்ஸர் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைய வைத்துள்ளார். தொடர் சமநிலையை எட்டியுள்ளதால் இனிவரும் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அந்த சாதனையை இதுவரை டி20 போட்டிகளில் 1000 மற்றும் 2000 ரன்களை கடந்த முதல் வீரர் ஆக நியூசிலாந்து அணியின் வீரர் மெக்கல்லம் கடந்து இருந்தார். அதற்கடுத்து தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் வீரராக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக மார்ட்டின் கப்தில் 99 போட்டிகளில் விளையாடி 2839 ரன்களையும், 109 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 2773 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.