இந்த 269 புன்னகையுடன் கிளம்புறேன்.. கிங் கோலியின் உருக்கமான ஓய்வு குறிப்பில்.. 269 நம்பரின் விவரம் இதோ

Virat Kohli 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையுடன் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்றார். இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி ஆரம்பக் காலங்களில் தடுமாற்றமாகவே விளையாடினார். இருப்பினும் அப்போதைய கேப்டன் தோனி அவருக்கு தேவையான ஆதரவுகளையும் வாய்ப்புகளையும் வழங்கினார். அதை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட விராட் கோலி 2013க்குப்பின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

கிங் கோலி ஓய்வு:

மேலும் 2014இல் தோனிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் 2016 – 2021 வரை இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக எதிரணிகளை சொல்லி அடித்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வரலாற்று வெற்றிகளை பெற்றது. இருப்பினும் ஐசிசி கோப்பையை வெல்லத் தவறியதால் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை துறந்த விராட் கோலி சாதாரணமாக பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார்.

அந்த வாய்ப்பில் சமீப வருடங்களில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறிய விராட் கோலி 36 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த ஓய்வு குறிப்பில் கடைசியாக 269வது நம்பர் விடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த 269வது நம்பர் என்னவெனில் விராட் கோலியின் டெஸ்ட் தொப்பி நம்பராகும்.

- Advertisement -

கோலி உருக்கம்:

அதாவது 2011ஆம் ஆண்டு விராட் கோலி இந்தியாவுக்காக 269வது வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடினார். அந்த நம்பரை கொண்ட தம்முடைய தொப்பியும் தாமும் தற்போது விடை பெற்றுள்ளதாக விராட் கோலி உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீலத் தொப்பியை அணிந்து 14 வருடங்கள் கடந்து விட்டது. உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது பயணம் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வரும் என்று நினைக்கவில்லை”

இதையும் படிங்க: விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் ரொம்ப குஷி – விவரம் இதோ

“டெஸ்ட் கிரிக்கெட் என்னை சோதித்து, வடிவமைத்து, வாழ்க்கையில் எடுத்துச் செல்வதற்கான பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்னிடம் இருந்து அனைத்தையும் கொடுத்து விட்டேன். அது நான் நம்பியதை விட அதிகமாகவே திரும்பிக் கொடுத்துள்ளது. இங்கிருந்து இந்த விளையாட்டு, களத்தை பகிர்ந்து கொண்ட நபர்கள், இந்தப் பாதையில் என்னைப் பார்த்த ஒவ்வொரு நபருக்காகவும் நன்றி நிறைந்த இதயத்துடன் விலகிச் செல்கிறேன். எனது டெஸ்ட் கேரியரை எப்போதும் புன்னகையுடன் திரும்பி பார்ப்பேன். 269 நம்பர் விடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement