ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 45 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 25 ரன்களும் அடித்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
துவக்க வீரர்களான அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 8 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்த அவர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர். அதன் பிறகு மூன்றாவதாக கிறிஸ் கெயில் வந்து தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் நிக்கலஸ் பூரன் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டி ஒரு சர்ப்ரைஸ் ஆக அமைந்தது. ஏனெனில் இறுதிவரை இந்த போட்டியை நாங்கள் கொண்டு சென்றோம். போட்டியில் எப்போது அழுத்தம் இருக்கும் போதும் அது உங்களை குழப்பமடையச் செய்யும். முடிவில் இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடினர். 170 ரன்கள் இந்த மைதானத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று நான் கருதினேன்.
ஆனால் எதிரணி இவ்வளவு அதிரடியாக துவங்கும்போது இந்த ரன்கள் நிச்சயம் பத்தாது மேலும் அவர்களை நாங்கள் அழுத்தத்திற்கு கொண்டுவர முடியவில்லை. இருப்பினும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த போட்டியின் மூலம் சில நல்ல விடயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். இதுபோன்ற போட்டிகளில் தான் மீண்டும் எவ்வாறு பலமாக திரும்பிவர வேண்டும் என்பது புரிகிறது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.