ஐபிஎல் தொடரில் தினமும் பல்வேறு புதிய புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அப்படிதான் நேற்றைய ஒரே போட்டியில் அடுத்தடுத்த இரு இன்னிங்ஸிலும் சுரேஷ் ரெய்னாவின் இரண்டு சாதனைகள் முறியடிக்கப்பட்டன. சென்னை சூப்பர் கிங்ஸின் நம்பிக்கை நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா பல ஐபிஎல் சாதனைகளை தன்வசம் வைத்திருப்பவர்.
நேற்றைய மும்பை – பெங்களூரு அணிகளுக்கிடையிலான லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா ஏற்கனவே செய்திருந்த இரண்டு சாதனைகளில் ஒன்றை மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவும், சுரேஷ் ரெய்னாவின் மற்றொரு சாதனையை பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லியும் முறியடியத்து புதிய சாதனைகளை படைத்தனர். நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி மொதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்து மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமலே உமேஷ் யாதவ் வீசிய முதல் இரண்டு பந்துகளில் இரண்டு முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் ரோகித்சர்மா மற்றும் லிவிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது.
இந்த 11வது ஐபிஎல் சீசனில் முதல் சிக்சரை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித்சர்மா இதே ஐபிஎல் சீசனின் 200வது சிக்சரை அடித்தது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.முன்னதாக இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் கிறிஸ் கெயில் ஒட்டுமொத்த ஐபிஎல்-இல் 102 போட்டிகளில் விளையாடி 269 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு அடுத்ததாக சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 163 ஐபிஎல் போட்டிகளில் 174 சிக்சர்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.நேற்றைய போட்டியின் ரோகித்சர்மா தான் விளையாடிடும் 163வது போட்டியில் அடிக்கப்பட்ட சிக்ஸர்களை சேர்த்து மொத்தம் 179 சிக்சர்களை அடித்து சுரேஷ்ரெய்னாவை மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின் விளையாடிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே தடுமாறினாலும் தனி ஒருவனாக நின்று விளையாடி ரன்களை குவித்தார் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.நேற்றைய போட்டியின்போது கோலி 32 ரன்களை கடந்திருந்த போது, ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை விளாசியோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
இதற்கு முன்புவரையிலும் ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 4558 ரன்களுடன் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா தான் முதலிடத்தில் இருந்தார்.நேற்றைய போட்டியில் சுரேஷ்ரெய்னாவை பின்னுக்கு தள்ளி விராட்கோலி முதலாம் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்த போதிலும் அவரது தலைமையிலான அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் மும்பை அணியின் ரோஹித் சர்மா 4,345 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பூர் 4,210 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் இந்த சாதனைகள் மாற்றி மாற்றி பிற வீரர்களால் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.