
விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிக்கிமுக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா 155 ரன்கள் குவித்து மும்பை எளிதாக வெற்றி பெற உதவினார். அதையும் சேர்த்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக முறை 150+ ரன்கள் குவித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் உலக சாதனையையும் அவர் சமன் செய்தார்.
மறுபுறம் ஆந்திராவுக்கு எதிராக 299 சேசிங்கில் 131 ரன்களை குவித்த விராட் கோலி டெல்லியை எளிதாக வெற்றி பெற உதவினார். அதையும் சேர்த்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் 16,000 ரன்கள் அடித்த இந்திய வீரராக அவர் சாதனை படைத்தார். அதனால் 2027 உலகக் கோப்பையில் தங்களை கழற்றி விட துடிக்கும் தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
அந்த சூழ்நிலையில் விஜய் ஹசாரே கோப்பையில் 2வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. அதில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி உத்தரகாண்ட்டை எதிர்கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பைக்கு திவ்வேந்திர சிங் வீசிய முதல் பந்திலேயே ரோஹித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அதே சமயம் டெல்லி அணி தங்களது அடுத்த போட்டியில் குஜராத்தை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு பிரான்ஸ் ஆர்யா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
கடந்த போட்டியில் சதமடித்த உற்சாகத்தில் இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடிய அவர் 29 பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 13 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்டு 77 (61) ரன்கள் குவித்து அவுட்டானார். கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் டக் அவுட்டான விராட் கோலி 3வது போட்டியில் 74* ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பினார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் சாதனை நிகழ்த்திய ஜோஷ் டங் – விவரம் இதோ
அடுத்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் 135, 102, 65 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் தொடர்நாயகன் விருது வென்றார். தற்போது விஜய் ஹசாரே கோப்பையில் 131, 77 ரன்களை குவித்துள்ள அவர் கடைசியாக விளையாடிய 6 லிஸ்ட் ஏ போட்டிகளில் 6 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து முரட்டுத்தனமான ஃபார்முக்கு வந்துள்ளார். அதனால் 2027 உலக கோப்பையிலிருந்து தம்மை கழற்றி விட நினைக்கும் கம்பீருக்கு அவர் மீண்டும் மீண்டும் பதிலடி கொடுத்து வருகிறார் என்றால் மிகையாகாது.