
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாறினார். இருப்பினும் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே அசத்தத் துவங்கிய விராட் கோலி இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்தார்.
குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்ட அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அத்துடன் 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் 2016 – 2021 வரை இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக எதிரணிகளை சொல்லி அடித்து ஏராளமான வெற்றிகளைப் பெற்றது. 2018/19 சீசனில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா தொடரை வென்று சரித்திரம் படைத்தது.
இருப்பினும் ஐசிசி கோப்பையை வெல்லத் தவறியதால் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி 2022ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து சாதாரண பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடி வந்த அவர் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறினார். அதனால் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி தற்போது இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக விராட் கோலி நங்கூரமாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்கும் ஸ்டைலைக் கொண்டவர். அப்படி பெரிய ரன்கள் குவிக்கும் விராட் கோலி சொந்த சாதனைகளுக்காக சுயநலத்துடன் விளையாடுவதாக பலமுறை விமர்சனங்களை சந்தித்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், இந்தியாவின் சஞ்சய் மஞ்ரேக்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விராட் கோலியை பலமுறை விமர்சித்துள்ளனர்.
அந்த சூழ்நிலையில் தற்போது விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9270 ரன்கள் எடுத்த கையுடன் ஓய்வு பெற்றுள்ளார். அதனால் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய 10000 டெஸ்ட் ரன்கள் அடித்து வரலாற்றுச் சாதனை படைக்கும் வாய்ப்பை விராட் கோலி 770 ரன்னில் தவற விட்டுள்ளார். இத்தனைக்கும் இந்திய அணியின் நலனுக்காக இன்னும் கொஞ்ச நாட்கள் விளையாடுங்கள் என்று பிசிசிஐ விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டது.
இதையும் படிங்க: இந்த 269 புன்னகையுடன் கிளம்புறேன்.. கிங் கோலியின் உருக்கமான ஓய்வு குறிப்பில்.. 269 நம்பரின் விவரம் இதோ
அதனால் விராட் கோலி நினைத்திருந்தால் இன்னும் சில வருடங்கள் விளையாடி எளிதாக 10000 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்க முடியாது. ஆனால் அதை செய்யாத அவர் இதுவே சரியான நேரம் என்பதை உணர்ந்து வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றுள்ளார். அதன் வாயிலாக தன்னை சுயநலமானவர் என்று விமர்சித்தவர்களின் முகத்தில் கரியை பூசியுள்ள விராட் கோலி ரசிகர்கள் மனதில் கிங் என்ற பட்டத்துடன் நீங்காத இடம் பிடித்து விடை பெற்றுள்ளார்.