இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்று பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியில் பிப்ரவரி 9-ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற இருக்கிறது.
விராட் கோலி வந்தால் வெளியேறப்போவது யார்? :
இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட விராட் கோலி இரண்டாவது போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் முதல் போட்டிக்கு முன்னதாக முழங்காலில் சிறிய அசவுகரித்தை சந்தித்த விராட் கோலி அதன் காரணமாக முன்னெச்சரிக்கையாகவே அந்த போட்டியில் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியின் போது டாசில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி போட்டிக்கு முன்னர் வரை பயிற்சி செய்தார் என்றும் ஆனால் பயிற்சி நிலையையே அவருக்கு முழங்காலில் சுலுக்கு ஏற்பட்டதாலேயே அவர் விளையாடவில்லை என்று கூறியிருந்தார்.
அதே வேளையில் முதல் ஒருநாள் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் துணைக்கேப்டன் சுப்மன் கில் விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய காயம் இல்லை என்றும் அதனால் நிச்சயம் அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று நினைப்பதாக கூறியிருந்தார்.
இதன் காரணமாக நிச்சயம் விராட் கோலி இரண்டாவது போட்டியில் பங்கேற்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக யாராவது ஒரு வீரரை பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விராட் கோலி அணிக்குள் வரும் பட்சத்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? துணைக்கேப்டன் சுப்மன் கில் – அளித்த பதில்
ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது தனது அறிமுக வாய்ப்பை பெற்ற அவர் 22 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்திருந்தார். ஏற்கனவே இந்திய ஒருநாள் அணியில் அனுபவ வீரர்கள் பலர் நிறைந்திருப்பதால் இளம் வீரரான இவரே வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



