
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறினார். முன்னதாக டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய அவருக்கு ஒருநாள் கேப்டன் பதவி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியுள்ள அவர் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 2011 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 7962 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் தனது 100ஆவது போட்டியை அவர் விளையாட இருக்கிறார். இவ்வேளையில் பிசிசிஐ-யானது விராட் கோலிக்கு ஒரு முக்கிய ஆஃபரை வழங்கியதாகவும் அந்த வாய்ப்பை விராட் கோலி வேண்டாம் என மறுத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் மிகச் சிறந்த டெஸ்ட் கேப்டனாக விளங்கிய விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்றும் விரும்பியது. பிப்ரவரி 25ஆம் தேதி துவங்கும் அந்த போட்டியில் அவர் கேப்டனாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
ஆனால் பிசிசிஐ-யின் அந்த ஆஃபரை மறுத்த விராட் கோலி தான் ஒரு வீரராகவே அந்த போட்டியில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு போட்டியினால் எதுவும் மாறிவிடாது என்றும் தான் இந்திய அணிக்காக தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்க இருக்கிறேன் என்றும் விராட்கோலி கூறியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இவரை தக்கவைக்காம தப்பு பண்ணிட்டோம். மெகா ஏலத்தில் KKR டார்கெட் செய்யும் முதல் வீரர் – இவர்தானாம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்திற்கு உயர்த்திய விராட்கோலி சிறப்பான பல இன்னிங்ஸ்களில் விளையாடி இருந்த வேளையில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக பங்கேற்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தவாரம் துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் இலங்கை அணிக்கெதிரான தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.