
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டி மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெர்த் நகரில் இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இந்திய அணியில் நித்திஷ் ரெட்டி அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக 500வது சர்வதேச போட்டியில் விளையாடும் 5வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்எஸ் தோனி, ராகுல் டிராவிட் ஆகியோரும் அந்த சாதனையைப் படைத்துள்ளார்கள்.
அந்த சூழ்நிலையில் ஆட்டத்தைத் துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த நம்பிக்கையின் நட்சத்திரம் விராட் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டானார். இப்போட்டியில் தான் தனது வாழ்நாளில் விராட் கோலி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார்.
2015 உலக்கோப்பை உட்பட தம்முடைய கேரியரில் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இதுவரை 1327 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி இன்று முதல் முறையாக டக் அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற விராட் கோலியின் உலக சாதனை முடிவுக்கு வந்தது. அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி (இந்தியா): 1327
2. மார்ட்டின் க்ரோ (நியூஸிலாந்து): 1116
3. சிவ்நரேன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்): 813
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் சுப்மன் கில்லும் 10 (18) ரன்களில் அவுட்டானார். அதனால் 25/3 என இப்போட்டியில் இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் – அக்சர் பட்டேல் ஆகியோர் நங்கூரமாக விளையாட முயற்சித்த சமயத்தில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா 25/3.. மாபெரும் வரலாற்று சாதனைப் போட்டியில் ஏமாற்றிய ரோஹித்.. சொதப்பிய கோலி
அதனால் ஓவர்கள் குறைத்து இப்போது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மொத்தத்தில் 223 நாட்கள் கழித்து இப்போட்டியில் இந்தியாவுக்காக விராட் கோலி ரோஹித் சர்மா களமிறங்கியது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் அந்த கம்பேக் போட்டியில் அவர்கள் 10 ரன்கள் கூட தாண்டாமல் ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.