
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கும் வேளையில் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரின் ஓபனிங்கோடு இன்னிங்சை துவங்கியது. 28 ரன்கள் சேர்த்த நிலையில் முதல் விக்கெட்டாக 11 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ராகுல் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணியானது 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் புஜாரா மற்றும் கோலி ஆகியோர் சரிவிலிருந்து மீட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஜாரா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது நிதானமான ஆட்டத்தினால் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார். ஆனால் 105 ரன்கள் இருக்கும் போது ஐந்தாவது விக்கெட்டாக கோலி 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த இன்னிங்சின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை ஒன்றையும் கடந்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இன்றைய போட்டியில் ஒரு ரன் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 490 இன்னிங்ஸ்களில் விரைவாக 23 ஆயிரம் ரன்களை குவித்த வீரராக விராட்கோலி மாறியுள்ளார். இப்படி சாதனை படைத்த பிறகு இவர் நிச்சயம் சதத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் கோலியிடம் இருந்து சதம் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. தற்போது இந்திய அணி இரண்டாவது சீசனில் வரை 48 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.