இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் சம்பிரதாய கடைசிப் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி சிட்னி நகரில் இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 46.4 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 41, மாட் ரென்ஷா 56, மேத்தியூ ஷார்ட் 30, டிராவிஸ் ஹெட் 29 ரன்கள் எடுத்தனர்.
ஆஸி கிங் கோலி அசத்தல்:
அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 183/3 என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை 236க்கு சுருட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4, வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக அந்த ஆட்டத்தில் மேத்தியூ ஷார்ட் அடித்த அதிரடியான பந்தை விராட் கோலி லாவகமாக கேட்ச் பிடித்தார். அத்துடன் கூப்பர் கோன்லி கொடுத்த கேட்ச்சையும் விராட் கோலி கச்சிதமாக பிடித்தார்.
இதையும் சேர்த்து ஆஸ்திரேலியா மண்ணில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி 65 இன்னிங்ஸில் 38 கேட்ச்கள் பிடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் மண்ணில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலிபடைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தின் இயன் போத்தம் 36 கேட்ச்கள் பிடித்ததே முந்தைய சாதனை.
விராட் கோலி சாதனை:
இது போக ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 339* கேட்ச்கள் பிடித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 4வது அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் சாதனையையும் அவர் உடைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. மகிளா ஜெயவர்தனே (இலங்கை): 440
2. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா): 364
3. ராஸ் டெய்லர் (நியூஸிலாந்து): 354
4. விராட் கோலி (இந்தியா): 339*
5. ஜேக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா): 338
இதையும் படிங்க: ஆஸியை 183/3 டூ 236க்கு அவுட்டாக்கிய இந்தியா.. டிராவிஸ் ஹெட்டை காலி செய்வதில் சிராஜ்.. பும்ராவின் சாதனை சமன்
இதிலிருந்து விராட் கோலி தம்மை சிறந்த ஃபீல்டர் என்பதை மீண்டும் புள்ளி விவரங்களால் நிரூபித்துள்ளார் என்றே சொல்லலாம். அப்படி இருந்தும் அவரை 2027 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்க யோசிக்கிறது. இருப்பினும் விராட் கோலி தம்முடைய ஃபிட்னஸ் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு தேர்வுக் குழுவை தேர்ந்தெடுக்க வைப்பார் என்று நம்பலாம்.



