விராட் கோலி – சூரியகுமார் ஆகியோரில் யார் சிறந்த டி20 பேட்ஸ்மேன்? சேவாக் உள்ளிட்ட 3 ஜாம்பவான்கள் அளித்த பதில் இதோ

Virat Kohli Virender Sehwag Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த தொடரில் ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோராலேயே இந்திய அணி குறைந்தபட்சம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது. அதில் கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருவதைப் போலவே இந்த உலகக் கோப்பையிலும் அசத்திய விராட் கோலி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வெற்றிகளில் பங்காற்றினார்.

குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி ஃபார்முக்கு திரும்பிய அவர் அதே புத்துணர்ச்சியுடன் இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்து மொத்தம் 296 ரன்களை குவித்தார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் நங்கூரமாக நின்ற அவர் சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்தி 50 (40) ரன்கள் விளாசி அசத்தினார்.

- Advertisement -

சிறந்த பேட்ஸ்மேன் யார்:

மறுபுறம் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் நாலாபுறமும் சுழன்றடிக்கும் சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மனாக சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் விராட் கோலிக்கு பின் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்த அவர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு பேட்டிங்கில் மிரட்டினார்.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு அன்றும் இன்றும் விராட் கோலி தான் சிறந்தவர் என முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் வீரேந்திர சேவாக் மற்றும் ஜஹீர் கான் பதிலளித்துள்ளனர். இருப்பினும் டி20 என்று வரும் போது விராட் கோலியை விட சூரியகுமார் சிறந்தவராக செயல்படுவதாக ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் சேவாக் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை அதிக ரன்கள் குவித்த விராட் கோலி தான் இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். மேலும் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் விளாசிய சதம் இந்த தொடரின் சிறந்த இன்னிங்ஸ் ஆகும்” என்று கூறினார்.

- Advertisement -

இது பற்றி ஜஹீர் கான் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவுக்கு இந்த உலகக் கோப்பை அபாரமாக அமைந்தது. ஜோஸ் பட்லர் இந்த தொடரில் ஃபார்முக்கு திரும்பிய நிலையில் கடைசி கட்டங்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் ஆரம்ப முதல் கடைசி வரை விராட் கோலி மட்டுமே தொடர்ச்சியாக தனது அணிக்காக மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக நின்றார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அந்த இன்னிங்ஸ் விளையாடியது இந்த தொடரில் அவர் எப்படி விளையாட போகிறார் என்பதை ஆரம்பத்திலேயே காட்டியது. நிறைய போட்டிகளில் அவுட்டாகாமல் இருந்தால் அவருடைய பேட்டிங் சராசரி அதிகமாக உள்ளது” என்று கூறினார்.

இருப்பினும் தம்மைப் பொறுத்த வரை சூரியகுமார் யாதவ் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஷிஷ் நெஹ்ரா குறிப்பிட்டு அதே நிகழ்ச்சியில் பேசியதற்கு பின்வருமாறு. “சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்றால் அது சூரியகுமார் என்று நான் சொல்வேன். அவர் இந்தியர் என்பதற்காக இதை சொல்லவில்லை கடந்த சில வருடங்களாகவே விளையாடுவதை வைத்து சொல்கிறேன்.

இதையும் படிங்க : வீடியோ : உங்களோட ஜெர்ஸிய தருவீங்களா? வார்னரிடம் கோரிக்கை வைத்த குட்டி ரசிகர் – அதற்கு வார்னர் அளித்த க்யூட் ரிப்ளை

ஏனெனில் 4வது இடத்தில் அவர் விளையாடும் ஸ்ட்ரைக் ரேட்டில் அவரைப் போல் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவது அவ்வளவு சுலபமல்ல. மேலும் இலங்கைக்கு எதிராக கிளன் பிலிப்ஸ் விளையாடியது இந்த தொடரின் சிறந்த இன்னிங்ஸ் ஆகும்” என்று கூறினார்.

Advertisement