
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூரு 20 ஓவரில் அதிரடியாக பேட்டிங் செய்ய முயற்சித்த போதிலும் 190/9 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 43 (35) ரன்கள் எடுத்தார்.
அவருடன் எதிர்புறம் பில் சால்ட் 16 (9), லிவிங்ஸ்டன் 25 (15), ஜிதேஷ் சர்மா 24 (10) ரன்களை எடுத்தார்கள். ஆனால் கடைசியில் ஃசெபார்ட் 16, க்ருனால் பாண்டியா 5 ரன்களை எடுத்த போதிலும் நன்றாக ஃபினிஷிங் செய்ய தவறினர். பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், கெய்ல் ஜெமிஷன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
அடுத்து விளையாடிய பஞ்சாப்பை சிறப்பாக பௌலிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 184/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சசாங் சிங் 61* ரன்கள் எடுத்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2, க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதனால் பஞ்சாப் தோல்வியை சந்தித்த நிலையில் பெங்களூரு தங்களுடைய முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இந்நிலையில் இந்த வெற்றி பற்றி விராட் கோலி பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றி எங்களுடைய ரசிகர்கள் மற்றும் அணிக்கானது. இதற்கு 18 வருடங்கள் தேவைப்பட்டது. என்னுடைய இளம் வயதையும் முக்கிய காலங்களையும் இந்த அணிக்கு கொடுத்துள்ளேன்”
“என்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்து விட்டேன். இது போன்ற நாள் வரும் என்று எப்போதும் நினைத்ததில்லை. ஏபிடி இந்த அணிக்கு ஆற்றிய பங்கு அற்புதமானது. போட்டி துவங்குவதற்கு முன்பாகவே நீங்களும் எங்களுடன் வந்து கொண்டாட வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். ஓய்வு பெற்ற 4 வருடங்கள் கழித்தும் அவர் எங்களுடைய அணியின் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வீரராக இருக்கிறார். எனவே எங்களுடன் அவர் கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர்”
“எது நடந்தாலும் இந்த அணியுடன் நான் விசுவாசமாக இருந்துள்ளேன். சில சிந்தனைகள் இருந்தாலும் இந்த அணியுடன் நின்று கொண்டேன். என்னுடைய இதயமும் உயிரும் பெங்களூருடன் இருக்கிறது. எனவே மூச்சு இருக்கும் வரை என்னுடைய ஐபிஎல் போட்டி இதே அணிக்காக விளையாடுவேன். இன்று நான் குழந்தையைப் போல் தூங்குவேன். ஒரு வழியாக இந்த வெற்றியை கொடுத்த கடவுளுக்கு நன்றி”
இதையும் படிங்க: வெறும் 6 ரன்ஸ்.. பஞ்சாப்பை சாய்த்து ஈ சாலா கப்பை நிஜமாக்கிய ஆர்சிபி.. வரலாற்றை மாற்றி எழுதி வெற்றி
“எங்களுடைய அணி நிர்வாகம் உண்மையில் சிறப்பானது. ஏலத்தின் முடிவில் எங்களுடைய அணி பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் இரண்டாவது நாளில் நாங்கள் பெற்ற வீரர்களால் மகிழ்ச்சியைப் பெற்றோம். என்னைப் பற்றி ஏற்கனவே நிறைய விஷயங்கள் பேசப்பட்டன. இந்த வெற்றி பெங்களூரு அணிக்கானது. இதுவும் என்னுடைய கேரியரின் சிறந்த தருணமாக இருக்கும். ஆனால் இது ஒரு டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு 5 மடங்கு கீழ் தான் இருக்கும். நீங்கள் மரியாதையைப் பெற விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்