
ஐசிசி 2024 20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஜூலை நான்காம் தேதி மும்பையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அன்று காலை நாடு திரும்பிய பின் பிரதமரை சந்தித்த இந்திய அணியினர் மாலை 5 மணிக்கு திறந்த வெளி பேருந்தில் ஊர்வலமாக வந்தனர். அவர்களை மும்பை கடற்கரை சாலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அந்த அன்பு வெள்ளத்திற்கு மத்தியில் மிதந்து வந்த இந்திய அணியினர் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு சென்ற இந்திய அணியினருக்கு பிசிசிஐ சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் 125 கோடி ரூபாய் பரிசும் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டது
கிங் கோலி நெகிழ்ச்சி:
அந்த விழாவில் கேப்டன் ரோகித் சர்மாவை தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் பேசினார். அப்போது ஃபைனலில் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் இதுவே நாம் ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் என்று உணர்ந்ததாக விராட் கோலி கூறினார். அத்துடன் வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே வீரர்களின் தோளில் சுமந்து வலம் வருவதற்கு தகுதியானவர் என்றும் விராட் கோலி கூறினார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 15 வருடங்களில் ரோகித் சர்மாவை இந்தளவுக்கு உணர்ச்சிபூர்வமாக நான் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். ஃபைனல் நடைபெற்ற பார்படாஸ் மைதானத்தில் போட்டி முடிந்ததும் நான் மாடிப்படி நோக்கி ஏறினேன். அப்போது ரோகித் சர்மா அழுதார். நானும் அவரை பார்த்து அழுது கட்டிப்பிடித்தேன்”
“இந்திய கிரிக்கெட்டை 21 வருடங்கள் தனது தோள் மீது சுமந்த மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை மட்டுமே இம்மைதானத்தில் தோளில் சுமப்பது நியாயமாகும். அதே சமயம் ரோஹித் சர்மாவும் நானும் அணியை கொஞ்சம் தோளில் சுமந்தோம் என்று நினைக்கிறேன். எனவே அந்த வான்கடே மைதானத்திற்கு இந்தக் கோப்பையை கொண்டு வருவதை விட சிறந்தது இருக்க முடியாது”
இதையும் படிங்க: இப்போவே கையெழுத்து போடுறேன்.. அதை செஞ்ச பும்ரா தலைமுறையின் ஒரு பவுலர்.. விராட் கோலி பாராட்டு
“ஃபைனல் போட்டியின் பாதியில் இது நாம் விடைபெற்று அடுத்த தலைமுறைக்கு வழி விடுவதற்கான நேரம் என்பதை நான் உணர்ந்தேன். 2011 உலகக் கோப்பையை வென்ற போது சீனியர் வீரர்களின் உணர்ச்சிகளை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் தற்போது சீனியராக இருக்கும் என்னால் அந்த உணர்ச்சிகளை உணர முடிகிறது” என்று கூறினார்.