உ.கோ ஜெயிக்காததால் என்னை பிளாப் கேப்டன்னு சொல்றவங்க அதை பாக்கலயே – விமர்சனங்களுக்கு விராட் கோலி ஆதங்க பதில்

Kohli
Advertisement

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தன்னுடைய அபார திறமையால் 25000+ ரன்களையும் 74 சதங்களையும் விளாசி ஜாம்பவான் சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக கருதப்படும் அவர் கேப்டனாக பெரிய அளவில் சாதிக்கவில்லை என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.

Kohli

முன்னதாக 2014ஆம் ஆண்டு தோனி ஓய்வு பெற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதே போல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் இருதரப்பு தொடர்களில் அட்டகாசமாக செயல்பட்டார்.

- Advertisement -

விராட் கோலியின் ஆதங்கம்:
மேலும் அவரது காலகட்டத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பிட்னஸ் அம்சத்தில் இந்திய அணி புதிய உச்சத்தை எட்டியது என்றே சொல்லலாம். இருப்பினும் 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக் கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை ஆகிய 3 ஐசிசி உலக கோப்பைகளில் கேப்டனாக வழி நடத்தி கோப்பையை வெல்ல தவறிய அவரால் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்தும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையையும் வெல்ல முடியவில்லை.

Virat Kohli 2013 Champions Trophy

அப்படி எந்த ஒரு கோப்பையும் வெல்லாத அவர் பிளாப் கேப்டன் என்ற பலரின் கிண்டல்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் தம்மை பிளாப் கேப்டன் என்று சொல்பவர்கள் 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற வீரராக சாதனை படைத்துள்ளதை பற்றி பேசுவதில்லை என விராட் கோலி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

மேலும் 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்களாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த தாம் இந்தியாவை எதிரணிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே மிரட்டும் வெற்றிகரமான அணியாக மாற்றிய கலாச்சாரத்தை உருவாக்கியதில் பெருமையடைவதாக தெரிவிக்கும் விராட் கோலி இது பற்றி ஆர்சிபி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “பெரிய தொடர்களை வெல்வதற்காகவே நீங்கள் விளையாடுகிறார்கள். 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் நான் கேப்டனாக செயல்பட்டேன்”

Kohli

“ஆனால் அதில் வெற்றியை பதிவு செய்ய தவறியதால் நான் தோல்வி கேப்டனாக முத்திரை குத்தப்பட்டேன். இருப்பினும் நான் என்னை அந்த கோணத்தில் மதிப்படவில்லை. மாறாக இந்திய அணியின் வெற்றி பெறும் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சாதித்ததை எப்போதும் நான் பெருமையாக கருதுகிறேன். பொதுவாக ஐசிசி உலக கோப்பைகள் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் வெற்றி பெறும் கலாச்சாரம் என்பது நீண்ட காலத்திற்கு ஒருமுறை தான் நடைபெறும். அதற்கு தொடரை வெல்வதை விட தொடர்ந்து சிறப்பாக செயல்படும் கேரக்டர் உங்களுக்கு தேவை. மேலும் ஒரு வீரராக நான் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 5 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளை வென்றுள்ளேன்”

இதையும் படிங்க:2017 முதல் சோக் செய்யும் உங்களுக்கு அண்டர்-19 டீம் எவ்ளவோ பரவால்ல – இந்திய மகளிரணியை விளாசிய முன்னாள் கேப்டன்

“அந்த கோணத்தில் நீங்கள் பார்க்கும் போது வரலாற்றில் சில வீரர்கள் ஒரு உலக கோப்பையை கூட வென்றதே இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமெனில் 2011 இந்திய அணியில் இடம் பிடிக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக நான் நிறைய ரன்களை அடித்ததால் அணியில் இடம் கிடைத்தது. அத்துடன் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 6வது முயற்சியில் தான் உலகக் கோப்பை வென்றார். ஆனால் நான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற அணியில் இருந்தேன். எனவே அவைகளை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் எனது அலமாரியில் கோப்பைகளை அடுக்கி வைக்காததை பற்றி நான் கவலைப்படவில்லை” என்று கூறினார்.

Advertisement