2017 முதல் சோக் செய்யும் உங்களுக்கு அண்டர்-19 டீம் எவ்ளவோ பரவால்ல – இந்திய மகளிரணியை விளாசிய முன்னாள் கேப்டன்

Indian Womens Harmanpreet Kaur Shafali Varma
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2023 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றாலும் வழக்கம் போல நாக் அவுட் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி பரிதாபமாக தோற்று வெளியேறியது. குறிப்பாக இதே தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற வரலாற்றின் முதல் அண்டர் 19 உலக கோப்பையை ஷபாலி வர்மா தலைமையில் வென்ற மறுமலர்ச்சி வெற்றியைப் பார்த்து சீனியர் கிரிக்கெட் அணியினரும் உத்வேகமடைந்து இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

Indian Womens

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆரம்பத்திலேயே பீல்டிங் துறையில் சொதப்பி ஒரு சில முக்கியமான கேட்ச்களை கோட்டை விட்ட இந்திய அணியினர் கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக 172 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியினருக்கு கடைசி பந்தில் சிக்சர் வழங்கியது இறுதியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க முக்கிய காரணமானது. அதை விட 173 ரன்களை துரத்தும் போது குறைந்த பட்சம் 50 ரன்களை ஆரம்பத்திலே அடித்துக் கொடுக்க வேண்டிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகிய 2 நம்பிக்கை நட்சத்திரங்கள் 50 ரன்கள் கூட குவிக்காமல் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அழுத்தத்தை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அண்டர்-19 டீம் பரவால்ல:
அதனால் ஏற்பட்ட சரிவில் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய ஜெமிமா ரோட்ரிகஸ் – கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோரும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். அதனால் 15 ஓவர்கள் வரை கையில் வைத்திருந்த வெற்றியை அதன் பின் வழக்கம் போல சொதப்பிய இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்தது. மேலும் 2017 உலகக் கோப்பை ஃபைனல், 2020 டி20 உலக கோப்பை ஃபைனல், 2022 காமன்வெல்த் ஃபைனலில் செய்த சொதப்பல்களில் இருந்து கொஞ்சமும் முன்னேறாத மகளிரணியினர் மீண்டும் கையில் வைத்திருந்த வெற்றியை எதிரணிக்கு கோட்டை விட்டது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் 2017 முதல் இதுபோல் அழுத்தமான நேரங்களில் சொதப்பி தோல்வியடையும் இந்திய சீனியர் அணிக்கு முதல் முயற்சிலேயே அண்டர் 19 உலக கோப்பை வென்ற ஜூனியர் அணி எவ்வளவோ பரவாயில்லை என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் டயானா எடுல்ஜி விமர்சித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டனான அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் 33 மாதங்கள் பிசிசிஐயை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட கமிட்டியில் ஒருவராக இருந்த பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட அவர் ஜூனியர் அணி சீனியர் அணியை போல் 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஜோக் செய்யவில்லை என்று கடுமையாக விமர்சித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நமது அண்டர்-19 அணியினர் சீனியர் அணியினரை விட பிட்டாக இருப்பதாக கருதுகிறேன். அவர்கள் ஃபைனலில் சோக் செய்யவில்லை. ஆனால் 2017 முதல் 2023 வரை சீனியர் அணியை பொறுத்த வரை அதே பழைய பஞ்சாங்கம் தான் தொடர்கிறது. என்னை கேட்டால் வீராங்கனைகளின் பிட்னஸ் அம்சத்தில் பிசிசிஐ முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மகளிருக்கு யோ யோ டெஸ்ட் மிகவும் கடுமையானது என்பதை நான் அறிவேன். தற்போது அந்த டெஸ்ட் நடத்தப்பட்டால் இந்திய அணியில் 15 வீராங்கனைகளில் 12 பேர் தோற்று விடுவார்கள்”

Diana Edulji Harmanpreet Kaur

“இருப்பினும் அவர்களின் பிட்னஸ் அம்சங்களை நிர்வாகிக்க வித்தியாசமான அளவுகோல் தேவைப்படுகிறது. இந்த உலகக் கோப்பை தோல்வியில் இருந்தாவது இனிமேல் சரியான திட்டம் மற்றும் தயாராகும் முறைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக கேட்ச் பிடிப்பது போன்ற ஃபீல்டிங் துறையில் முன்னேறுவதற்கு முதலில் நீங்கள் பிட்னஸ் அம்சத்தில் முன்னேற வேண்டும். உங்களது கால்கள் பலமாக இல்லை என்றால் உங்களால் வேகமாக ஓட முடியாது. எனவே இந்த விஷயத்தில் பிசிசிஐ பிரம்பு எடுத்து செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க:அவர் மட்டும் இல்லனா இந்த லெவலுக்கு வந்துருக்க மாட்டேன் – தோனி நட்பை பற்றி பல அறியாத விஷயங்களை பகிர்ந்த விராட் கோலி

“ஏனெனில் இப்போது ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் சம்பளம் கொடுப்பது உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இங்கே வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி கிடைப்பதால் பிசிசிஐ சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மேலும் நட்சத்திர அந்தஸ்து இதுவரை நமக்கு வெற்றிகளை கொடுக்கவில்லை என்பதால் திறமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement