ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்தத் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெற்ற இந்தியா 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றது. அந்த வெற்றியைப் பற்றி பெரும்பாலான இந்திய வீரர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால் விராட் கோலி மட்டும் அதைப்பற்றி தம்முடைய சமூக வலைதளத்தில் பதிவிடாதது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் இந்திய விளையாட்டு வீரர்களிலேயே விராட் கோலிக்கு தான் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ, மெஸிக்கு பின் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
2 கோப்பையா கிடைக்கப்போகுது:
அப்படி இருந்தும் அவர் இந்திய அணியின் வெற்றியைப் பற்றி பதிவிடாதது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. சொல்லப்போனால் சமீப காலங்களாகவே தனது சமூக வலைதளங்களில் விராட் கோலி விளம்பரம் சம்பந்தமான பதிவுகளை மட்டுமே பதிவிடுகிறார். தனது சொந்த வாழ்க்கை சம்பந்தமானப் பதிவுகளைப் பதிவிடுவதை அவர் புறக்கணித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அது பற்றி விராட் கோலியிடம் நேரடியாகவே தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டால் மட்டும் இந்திய அணிக்கு 2 சாம்பியன்ஸ் ட்ராபி கிடைத்து விடுமா? என்று விராட் கோலி ஜாலியாக கூறியுள்ளார். மேலும் தமது பதிவுகளை சிலர் விரும்பாததாலயே சொந்த பதிவுகளை குறைத்து விட்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.
காரணத்தை பகிர்ந்த கோலி:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பற்றி பதிவிடுவது என்னுடைய இதயத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போவதில்லை. ரசிகர்கள் அனைவருமே நாங்கள் கோப்பையை வென்றோம் என்பதை அறிவார்கள். எனவே அதைப்பற்றி பதிவிடுவது எங்களுக்கு 2 கோப்பைகளைக் கொடுக்கப் போவதில்லை”
இதையும் படிங்க: எனக்கே பிடிக்கல.. சிலருக்கு பிடிக்கலனாலும் அவங்களுக்கு பிடிப்பதால் இதை செய்றேன்.. விராட் கோலி பேட்டி
“நிதர்சனம் என்பது அப்படியே தான் இருக்கப் போகிறது. இப்போதெல்லாம் நான் அதிகமாக எதையும் பதிவிடுவதில்லை. அதைப் பதிவிடுவதால் சிலருக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. அது நான் மனப்பூர்வமாக முயற்சி செய்த ஒன்று. எனக்கு அது மிகவும் அதிகமாக இருந்தது. நிறைய ஆற்றலை எடுத்துக் கொண்டது. எனவே அதை பதிவிடாமல் இருக்கும் போது அதே ஆற்றலை என்னால் விளையாட்டிலோ அல்லது சொந்த வாழ்க்கையிலோ பயன்படுத்த முடியும்” எனக் கூறினார்.



