
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2014ஆம் ஆண்டு ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறியது. அந்த காலகட்டங்களில் தோனி தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இந்தியா படுதோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்றதால் அவர்களுக்கு தகுந்த அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாததே முக்கிய காரணமாக அமைந்தது.
அந்த சூழ்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பையும் ஆதரவையும் வழங்கினார். அத்துடன் வெளிநாடுகளில் 6 பேட்ஸ்மேன்கள் 5 பவுலர்கள் என்ற புதிய பிளேயிங் லெவனனையும் விராட் கோலி உருவாக்கினார். அந்த அணியுடன் ஆக்ரோசமாக கேப்டன்ஷிப் செய்த அவருடைய தலைமையில் 2016 – 2021 வரை இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்தது.
மேலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் நீண்ட வருடங்கள் கழித்து இந்தியா வெற்றிகளை பெற்றது. இந்நிலையில் அந்த காலகட்டங்களில் இந்திய டெஸ்ட் அணியில் செய்த மாற்றங்களை பற்றி விராட் கோலி பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் சமீபத்திய பேட்டியில் விளக்கியது பின்வருமாறு. “டெஸ்ட் அணியில் நான் கேப்டனாக வந்தது சவாலாக இருந்தது”
“அந்த சமயத்தில் நீங்கள் இளம் வீரர்களுக்கு வழி விட்ட நிலையில் மஹி பாய் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விலகினார். அப்போது 25 வயதில் இருந்த நான் எப்படி நமது அணியை மாற்றுவது? என்பது பற்றி உட்கார்ந்து நினைத்தோம். அது தற்செயலாக நடக்காது திட்டமிட வேண்டும் என்று நினைத்தேன். குறிப்பாக அடுத்த 7 வருடங்களுக்கு இதனுடைய தீர்வு வரும் என்பதற்கு தகுந்தாற்போல் யோசிக்கத் துவங்கினேன்”
“அதற்கு வேகப்ந்து வீச்சாளர்கள் குழு தேவைப்பட்டது. நீண்ட நேரம் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் தேவைப்பட்டனர். 350 – 400 ரன்களை தொடர்ந்து குவிக்கக்கூடிய 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் கீப்பர் தேவைப்பட்டது. எங்களால் 7வது பேட்ஸ்மேனை கொண்டிருக்க முடியாது. அந்த சவால் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் 2014 – 2021 வரை விராட் கோலி மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தினார்.
இதையும் படிங்க: இந்தியான்னா ஏமாளியா? இதை ஏன் ஆஸி, இங்கிலாந்திடம் கேட்கல.. கத்துக்க சொல்லுங்க.. செய்தியாளரை சாடிய கம்பீர்
அதில் 40 வெற்றிகளை பெற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக தோனி, கங்குலியை முந்தி சாதனை படைத்தார். அத்துடன் உலகில் கிரேம் ஸ்மித், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பின் அதிக வெற்றிகளைப் பெற்ற 4வது கேப்டனாகவும் சாதனை படைத்தார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த ஆசிய கேப்டனாகவும் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.