இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011இல் அறிமுகமான அவர் 2025 வரை 123 போட்டிகளில் 9230 ரன்களை அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். 2016 – 2021 வரை இந்தியாவை கேப்டனாக அவர் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார்.
அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்த இந்தியா மொத்தம் 40 வெற்றிகளைப் பெற்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி 36 வயதில் சிறப்பான ஃபிட்னஸ் கொண்டுள்ளார். அதனால் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
திடீர் ஓய்வு:
அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடிக்கும் பொன்னான வாய்ப்பை விராட் கோலி வெறும் 770 ரன்கள் வித்தியாசத்தில் தவற விட்டது அவருடைய ரசிகர்களை சோகமடைய வைத்தது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்காக கொடுத்து விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இனிமேலும் சாதிக்கவோ நிரூபிக்கவோ எதுவுமில்லை என்று உணர்ந்ததாலேயே ஓய்வு பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
4 நாட்களுக்கு ஒரு முறை தம்முடைய தாடிக்கு வர்ணம் (டை) பூசும் அளவுக்கு தமக்கு வயதும் ஆகி விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய தாடியை 2 நாட்களுக்கு முன்பாகத்தான் வர்ணம் செய்தேன். உங்களுடைய தாடியை ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒரு முறை வர்ணம் பூசினால் உங்கள் (விடை பெறும்) நேரம் வந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியும்”
விராட் கோலி விளக்கம்:
“இந்த முடிவு எளிதானது கிடையாது என்றாலும் சரியானதாக உணர்கிறேன். என்னால் முடிந்த அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொடுத்து விட்டேன். அதுவும் நான் நம்பியதை விட எனக்கு அதிகமாகவே திரும்பிக் கொடுத்துள்ளது. அதனால் மிகுந்த நன்றியுணர்வுடன் இந்த விளையாட்டிலிருந்து வெளியேறினேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 99 ரன்ஸ்.. மெண்டிஸ் அசத்தல்.. வங்கதேசத்தின் 23 வருட கனவை மீண்டும் பொய்யாக்கிய இலங்கை.. சொந்த மண்ணில் வெற்றி
முன்னதாக 2021 முதலே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தடுமாறிய விராட் கோலி தொடர்ச்சியாக பெரிய ரன்களை குவிக்க முடியாமல் திணறினார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியைத் தவிர்த்து எஞ்சிய 4 போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக அதே பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தார். அதனால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அவர் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



