மெசேஜ் பண்ணிருக்கலாம் ஆனால் இப்படி பொதுவெளியில் – முன்னாள் வீரர்களின் விமர்சனங்களால் கோலி ஆதங்கம்

kohli
Advertisement

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா தனது லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தாலும் சூப்பர் 4 சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களுடன் நிலவுகிறது. முன்னதாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி இந்த தொடரில் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கி இதுவரை 35, 59, 60 என நல்ல ரன்களை எடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அதிர்ஷ்டத்துடன் 35 (34) ரன்கள் எடுத்த அவர் ஹாங்காங்க்கு எதிராக தடுமாறாமல் 59* (44) ரன்கள் எடுத்து வெற்றி பங்காற்றினார். ஆனாலும் விமர்சனங்களை சந்தித்த அவர் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தடுமாறியபோது மீண்டும் நங்கூரமாக நின்று 60 (44) ரன்களை விளாசி 181 ரன்கள் எடுக்க உதவினார். குறிப்பாக அப்போட்டியில் சிக்ஸர் அடித்து அரைசதம் அடித்த அவரது ஆட்டம் ஃபார்முக்கு திரும்பி விட்டதாக உணர்த்தியது.

- Advertisement -

கடுமையான விமர்சனங்கள்:
மேலும் இந்த ஆசிய கோப்பையில் இதுவரை அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாகவும் அவர் சாதனை படைத்து வருகிறார். இதேபோல் அவ்வப்போது 50, 70 போன்ற ரன்களை அடிக்கும் அவர் 2019க்குப்பின் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்களின் பட்டியலில் இப்போதும் இடம் பிடித்துள்ளார். ஆனாலும் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக பார்ம் அவுட்டாகி விட்டதாக கருதும் பெரும்பாலானவர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

Ajay-Jadeja-and-Virat-Kohli

அந்ளவுக்கு ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கினாலே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று தனித்துவமான தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவருக்கு யானைக்கும் அடி சறுக்கும், பகலானால் இரவு வரும் என்பதை உணராமல் நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் இந்த மோசமான காலகட்டத்தில் ஆதரவு கொடுக்காமல் அணியிலிருந்து நீக்குமாறு வெளிப்படையாக விமர்சித்தனர்.

- Advertisement -

ஆனால் அவரது அருமையையும் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரும் இதுபோன்ற தருணங்களை கடந்துதான் சாதனைகளை படைத்துள்ளார் என்பதை தெரிந்த ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா போன்ற நிறைய வெளிநாட்டவர்கள் விமர்சனத்தையும் மிஞ்சும் ஆதரவை கொடுத்தனர். இந்நிலையில் இந்த மோசமான காலகட்டத்தில் நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் பொதுவெளியில் விமர்சிக்காமல் தன்னிச்சையாக தம்மைத் தொடர்பு கொண்டு இதிலிருந்து எப்படி வெளிவருவது என்பது போன்ற ஆலோசனைகளை கொடுத்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கும் என்று விராட் கோலி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

VIrat Kohli IND vs HK

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் இந்த உலகிற்கு முன்னால் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் செய்தால் அது எனக்கு உதவியாக இருக்காது. ஒருவேளை உங்களது விமர்சனங்கள் என்னுடைய முன்னேற்றத்திற்கானது என்றால் நீங்கள் என்னை தனித்தனியாக நேரடியாக தொடர்பு கொண்டு சொல்லியிருக்கலாம். அந்த வழியில் நீங்கள் நான் எவ்வாறு முன்னேற வேண்டும் என்று தெரிவித்திருக்கலாம்”

- Advertisement -

“நான் எனது வாழ்க்கையை மிகுந்த நேர்மையுடன் வாழ்வதால் நீங்கள் சொல்வதை கண்டிப்பாக நான் பின்பற்றியிருப்பேன். மேலும் நீங்கள் சொல்வது தேவையில்லை என்று உதாசீனப்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் உண்மையாக என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். இந்த விமர்சனங்களுக்கு பதிலாக நான் அதை மட்டுமே சொல்ல முடியும்”

Kohli

“நீங்கள் நீண்ட காலம் உண்மையுடன் விளையாடும்போது உங்களை அனைத்தையும் செய்யும் வல்லவர் என்று அனைவரும் பார்க்கிறார்கள். எனவே என்னால் முடிந்தவரை என்னால் அணிக்கு பயனுள்ளவரை இந்த வழியில் நான் விளையாடுவேன்” என்று கூறினார். அதாவது இந்த சோதனைக் கால கட்டத்தில் விமர்சனங்களுக்கு செவி சாய்த்தால் தம்முடைய மனமும் செயல்பாடுகளும் மேலும் பாதிப்படையும் என்பதால் ஊடகங்களின் வாயிலாக முன்னாள் வீரர்கள் கொடுத்த விமர்சனங்களுக்கு செவி சாய்க்கவில்லை என்று விராட் கோலி கூறுகிறார்.

இதையும் படிங்க : ஒரு பந்து கூட சந்திக்காத அவரை ஏன் நீக்குனீங்க – இந்தியாவின் முடிவில் பாக் ஜாம்பவான் அதிருப்தி

அந்த நிலைமையில் தன்னைத் தொடர்பு கொள்வதற்கு உண்டான அனைத்து உரிமைகளும் மொபைல் நம்பரும் உள்ள இந்திய முன்னாள் வீரர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு விமர்சனங்களையும் அதிலிருந்து எவ்வாறு முன்னேறுவது என்ற ஆலோசனைகளையும் கொடுத்திருந்தால் அதை உதாசீனப்படுத்தாமல் பின்பற்றியிருப்பேன் என்று தெரிவிக்கும் விராட் கோலி மாறாக பொதுவெளியில் தினந்தோறும் விமர்சித்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருந்ததாக மறைமுகமாக கூறியுள்ளார்.

Advertisement