
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 46வது போட்டியில் டெல்லி அணியை பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 163 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பெங்களூருவுக்கு ஜேக்கப் பேத்தல் 12, படிக்கல் 0, கேப்டன் ரஜத் படிதார் 6 ரன்னில் அவுட்டானதால் 26/3 என ஆரம்பத்திலேயே திணறியது.
அப்போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 51 (48) ரன்கள் அடித்து பெங்களூரு அணியை தூக்கி நிறுத்தினார். அவருடன் சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ருனால் பாண்டியா 73* (47), டிம் டேவிட் 19* (5) ரன்களை விளாசினர்கள். அதனால் 18.3 ஓவரிலேயே இலக்கைத் தொட்ட பெங்களூரு தங்களுடைய 7வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அத்துடன் ஒரு ஐபிஎல் தொடரில் வெளியூர் மண்ணில் 6 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் பெங்களூரு படைத்துள்ளது. அது போக அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி தன்வசமாக்கியுள்ளார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான ஊதா தொப்பியை ஜோஸ் ஹேசல்வுட் தன் வசம் வைத்துள்ளார்.
புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் ஜொலிக்கும் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்து அனைத்து முக்கிய விருதுகளையும் மொத்தமாக அள்ளி வருகிறது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே அடித்து நொறுக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பது தவறான அணுகுமுறை என்று விராட் கோலி கூறியுள்ளார். மாறாக சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடுவதே முக்கியம் என்று தெரிவிக்கும் அவர் ஆரஞ்சு, ஊதா தொப்பிகளை வைத்திருக்கும் அளவுக்கு ஆர்சிபி முழுமையான பலத்துடன் அசத்துவதாக விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் ஆழமாக சென்று விளையாடுவது அல்லது பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது முக்கியம் என்பதை மக்கள் மறந்து விட்டார்கள். இந்த வருடம் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கினால் மட்டும் வெல்ல முடியாது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் தொழில்முறையாக இருந்து சூழ்நிலைகளைப் படித்து எதிரணி பவுலர்களை டாமினேட் செய்யும் நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்”
இதையும் படிங்க: எந்த கிரவுன்ட்ங்குறது முக்கியம் இல்ல.. இதுதான் முக்கியம்.. டெல்லி அணியை வீழ்த்திய பின்னர் – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி
“பிட்ச் ஸ்லோவாக இருக்கையில் உங்களுக்கு ஸ்ட்ரைக்கை மாற்ற தெரியாவிட்டால் அனைத்தும் கடினமாகி விடும். நீங்கள் நின்று விளையாடுங்கள் நான் ரிஸ்க் எடுத்து விளையாடுகிறேன் என்று க்ருனால் சொன்னார். ஜிதேஷ், டிம் டேவிட், செபாஃர்ட் ஆகியோர் இருப்பதால் எங்களிடம் எக்ஸ்ட்ரா பவர் இருக்கிறது. ஹேசல்வுட், புவனேஸ்வர் ஆகியோர் உலகத்தரமான பவுலர்கள். ஹேசல்வுட் ஊதா தொப்பியை வைத்திருப்பதில் காரணம் இருக்கிறது. சூயஸ் எங்களுடைய கருப்பு குதிரை” எனக் கூறினார்.