எவ்ளோ பாத்தாச்சு. ஆனா இந்த ஒரு தோல்வி ரொம்ப வலிக்குது – வேதனையை பகிர்ந்த விராட் கோலி

Kohli
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 ஸ்டார் வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. இருப்பினும் கடந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி அந்த பதவியில் இருந்து விலகியதால் அந்த அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது.

rcb

வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தின் வாயிலாக தங்கள் அணிக்கான கேப்டனை தேர்வு செய்ய பெங்களூரு அணி நிர்வாகம் தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை எவ்வளவு கோடிகள் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் அணிக்கு கேப்டனாக நியமிக்க அந்த அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

கேப்டன் கோலி:
முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி அப்போது முதல் தனக்கே உரித்தான ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடினார். சச்சினுக்கு பின் இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி பெங்களூர் அணிக்காக பேட்டிங்கிலும் மலை போல ரன்களை குவித்தார் என்றே கூறலாம்.

RCB

ஒரு கேப்டனாகவும் பேட்டராகவும் அவருக்கு அமைந்த ஒரு மிகச்சிறந்த சீசன் என்றால் அது ஐபிஎல் 2016 தொடராகும். அந்தத் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்து தாண்டவம் ஆடினார் என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் அந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை கருணையே இல்லாமல் பந்தாடிய அவர் 16 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் உட்பட 976 ரன்களை குவித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் காரணமாக ஐபிஎல் 2016 தொடரின் தொடர் நாயகன் விருதை வென்ற விராட் கோலி சச்சினுக்கு பின் ஆரஞ்சு தொப்பியை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த 976 ரன்கள் மற்றும் 4 சதங்கள் என்பது இன்றுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு உடைக்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது.

- Advertisement -

பெங்களூருவின் தோல்வி:
மொத்தத்தில் அந்த சீசனில் கேப்டனாகவும் பேட்டராகவும் பட்டையை கிளம்பிய விராட் கோலி தலைமையில் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பெங்களூரு முதல் முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதன்பின்பும் கூட ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த விராட் கோலி கடந்த வருடம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

rcb vs srh

இந்நிலையில் ஐபிஎல் 2016 தொடரின் பைனலில் அடைந்த மறக்க முடியாத தோல்வி பற்றி விராட் கோலி தற்போது மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த சீசன் மிகவும் நம்ப முடியாத ஒன்றாகும். ஏனெனில் அப்போது 3 – 4 வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். டி20 கிரிக்கெட்டில் அதுபோல அனைவரும் சிறப்பாக செயல்படுவது என்பது அரிதாகும். அந்த சமயத்தில் “அந்த சீசனில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனாலும் கூட நம்மால் வெற்றியை பெற முடியும்” என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்தது. அந்த நம்பிக்கை எங்களை விட்டு செல்லவே இல்லை. இருப்பினும் அது போன்ற நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் உருவாக்குவது என்பது கடினமாகும். அந்த சீசனில் அது இயற்கையாகவே உருவானது” என கூறியுள்ளார்.

- Advertisement -

இன்னும் வலிக்கிறது:
“அது(தோல்வி) எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் வெற்றியின் மிக அருகில் செல்ல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் முடிவில் நான் அதை அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் எதிரணி அன்று சிறப்பாக செயல்பட்டிருந்தால் நீங்கள் அதை ஏற்க வேண்டும். நாங்கள் வெற்றி பெறாததற்குக் காரணம் அந்த நெருக்கடியான தருணங்களில் தைரியமாகவோ அல்லது எங்கள் திட்டங்களில் தெளிவாகவோ இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ரசிகர்கள் எங்களிடம் இருந்து வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களை சமாளிக்க வேண்டும். நீங்கள் அவர்களை விட்டு ஓட முடியாது” என இது பற்றி மேலும் தெரிவித்த விராட் கோலி 2016ஆம் ஆண்டு பெற்ற தோல்வி இன்னும் வலிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

RCB2019

அந்த பைனலில் 208 என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் ஓப்பனிங்கில் வெறும் 9 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததால் பெங்களூருவின் வெற்றி உறுதியானது. ஆனால் கடைசி 9.3 ஓவர்களில் அடுத்த 7 விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு சரிவது போல பரிசளித்த பெங்களூரு வெறும் 80 ரன்கள் மட்டும் எடுத்து வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் எதிரணியிடம் தாரை வார்த்தது.

“அந்த தோல்வி ஏற்கனவே எழுதப்பட்டது என நினைக்கிறேன். ஏனெனில் பெங்களூருவில் நடந்த அந்த பைனலில் ஆரம்பம் முதல் அசத்திய நாங்கள் இறுதிப் போட்டியிலும் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்திருந்த பின்னும் தோல்வி ஏற்பட்டது. அந்தப் போட்டியின் புகைப்படத்தை இன்னும் வைத்துள்ள கேஎல் ராகுல் அந்த தோல்வி இன்னும் வலியை கொடுக்கிறது என கூறுவார். ஆம் அந்தத் தோல்வி இன்னும் வேதனையாக உள்ளது. அது தோல்விக்கு பின் எங்கள் அணி வீரர்களின் முகத்தில் தெரியும்” என இதுபற்றி விராட் கோலி மேலும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Advertisement