நிறைவு பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 வருடங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதில் ரோகித் சர்மா முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட்டானாலும் கடைசி போட்டியில் சூப்பர் ஓவரிலும் சேர்த்து அடித்து நொறுக்கி இந்தியாவை வெற்றி பெற வைத்து தரத்தை காண்பித்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்து 2வது போட்டியில் 29 ரன்களில் அவுட்டான விராட் கோலி 3வது போட்டியில் டக் அவுட்டானர். ஆனால் 3வது போட்டியில் முக்கியமான நேரத்தில் கரீம் ஜானத் அடித்த சிக்சரை பவுண்டரி எல்லையில் பும்ரா போல காற்றில் தாவி பறந்து தடுத்த அவர் ரன்னிங்கிலேயே கேட்ச் பிடித்து சூப்பர் ஓவரில் முக்கிய ரன் அவுட் செய்தார்.
ஃபிட்டாக மாற்றியவர்:
அந்த வகையில் தன்னுடைய அற்புதமான ஃபிட்னஸை பயன்படுத்தி ஃபீல்டிங் துறையில் கில்லியாக செயல்பட்ட விராட் கோலி அப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். சொல்லப்போனால் விராட் கோலியின் ஃபீல்டிங் காரணமாகவே அப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மனதார பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்த தலைமுறையில் விளையாடும் அனைத்து வீரர்களையும் விராட் கோலி தான் ஃபிட்டாக மாற்றியதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். அதாவது தற்போதுள்ள அனைத்து வீரர்களும் விராட் கோலியை போல் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அவர் ஃபிட்னஸில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலியின் தரத்தை பற்றி அவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஒரு வீரரின் மகத்துவத்தை மதிப்பிட விரும்பினால் அதற்கு 3 – 4 உள்ளீடுகள் இருக்கும். அதில் ஒன்று நீண்ட காலம் விளையாடுவதாகும். தற்போது 35 வயதாகும் அவர் இன்னும் 4 வருடங்கள் விளையாடுவார். அப்போது அவர் எந்தளவுக்கு கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது இன்னும் உங்களுக்கு தெரியும்”
இதையும் படிங்க: அவர் முரளிதரன், வார்னே இல்ல.. இதை ஃபாலோ பண்ணா ஈஸியா அடிக்கலாம்.. இங்கிலாந்துக்கு பீட்டர்சன் ஆலோசனை
“அவர் உங்களுக்கு போட்டிகளை வென்று கொடுப்பார். அதை விட அவர் இந்த மொத்த தலைமுறையையும் ஃபிட்டாக மாற்றியுள்ளார். அவர் நவீன கிரிக்கெட்டின் ஃபிட்னஸில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மற்றொன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நீங்கள் எப்படி அசத்துகிறீர்கள் என்பது முக்கியம். அந்த வகையில் அவர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். எடுத்துக்காட்டாக ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 இரட்டை சதங்கள், ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் கிட்டத்தட்ட 1000 ரன்கள் என்பது போன்ற அவருடைய சாதனைகள் பொய் சொல்லாது” என்று கூறினார்.