CWC 2023 : மூழ்கிய இந்தியாவை காப்பாற்றிய கோலி – ராகுல் ஜோடி.. ஆஸிக்கு எதிராக 24 வருட புதிய சாதனை

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாராக விளையாடி 49.3 ஓவரில் 199 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் டேவிட் வார்னர் 41 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 200 ரன்கள் என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஸ்டார்க், ஹேசல்வுட் வேகத்தில் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

சாதனை ஜோடி:
அதனால் 2/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தனர். நேரம் செல்ல செல்ல சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தது.

குறிப்பாக 3வது ஓவரில் இணைந்த கைகளாக ஜோடி சேர்ந்த அவர்கள் 38 ஓவர்கள் வரை ஆஸ்திரேலியாவுக்கு மெகா சவாலை கொடுத்து தோல்வி கடலில் மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தி வெற்றி பாதைக்கு அழைத்த வந்தனர். அதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 6 பவுண்டரியுடன் 85 (116) ரன்கள் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ராகுல் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 97* (115) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அவருடன் பாண்டியா 11* (8) ரன்கள் எடுத்ததால் 41.2 ஓவரில் 201/4 ரன்கள் எடுத்த இந்தியா அசாத்தியமான வெற்றியைப் பெற்று அசத்தியது. அந்த வகையில் இந்த போட்டியில் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பை வரலாற்றில் 5 கோப்பைகளை வென்று அசுரனாக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.

இதையும் படிங்க:IND vs AUS : இப்படி ஸ்டார்ட் ஆகும்னு நான் நினைக்கல. நல்லவேளை அவங்க 2 பேரும் காப்பாத்திட்டாங்க – ரோஹித் மகிழ்ச்சி

இதற்கு முன் லண்டனில் கடந்த 1999 உலக கோப்பையில் அஜய் ஜடேஜா மற்றும் ராபின் சிங் ஆகியோர் 141 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். சொல்லப்போனால் அப்போட்டியில் தோல்வியை சந்தித்த போதிலும் அந்த 24 வருட சாதனையை உடைத்த ராகுல் – விராட் கோலி இம்முறை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கு சொந்த மண்ணில் மறக்க முடியாத வெற்றியை பரிசளித்தனர்.

Advertisement