ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து நடைபெறும் பிளே ஆஃப் சுற்றில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்த பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
அதில் வெல்லும் அணி நேரடியாக ஃபைனலுக்கு செல்லும். தோல்வியைச் சந்திக்கும் அணி குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியுடன் குவாலிஃபயர் இரண்டில் விளையாடத் தகுதி பெறும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை தோற்கடித்து ஆர்சிபி நேரடியாக ஃபைனலுக்கு செல்லுமா என்ற எதிர்பார்த்து காணப்படுகிறது.
பிளே ஆஃப் தடுமாற்றம்:
அந்த அணியின் வெற்றிக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. வழக்கம் போல இந்த வருடமும் நங்கூரம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தும் அவர் 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற உதவியுள்ளார். அப்படிப்பட்ட அவர் பிளே ஆஃப் சுற்றிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பிளே ஆஃப் சுற்றில் விராட் கோலி சிறப்பாக விளையாடியதில்லை என்று ஐபிஎல் வரலாறு சொல்கிறது. ஆம் ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி மிகவும் அழுத்தமான பிளே ஆஃப் சுற்றில் 15 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த 15 போட்டிகளில் 341 ரன்களை அவர் 121.78 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 26.23 என்ற சராசரியில் எடுத்துள்ள சுமாராகவே விளையாடியுள்ளார்.
இம்முறை அசத்துவாரா:
அந்த 15 போட்டிகளில் அவர் வெறும் 2 அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளார். கடைசியாக 9 வருடங்களுக்கு முன் நடைபெற்ற 2016 ஐபிஎல் இறுதிப்போட்டியில் விராட் கோலி அரை சதத்தை அடித்துள்ளார். மொத்தமாக தனது ஐபிஎல் கேரியரில் 8600க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள அவர் அழுத்தமான பிளே ஆஃப் சுற்றில் 400 ரன்களை கூட அடிக்கவில்லை.
இதையும் படிங்க: அப்படின்னா 2025 கோப்பை ஆர்சிபி’க்கா? அதிர்ஷ்டமான இடத்தால் உதயமாகும் ஐபிஎல் கோப்பை? விவரம் இதோ
இதிலிருந்து ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் விராட் கோலி திணறலாக விளையாடி வருவது தெரிகிறது. இருப்பினும் இதே போல ஐசிசி ஒருநாள் கோப்பை தொடர்களில் விராட் கோலி அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வந்தார். அதை 2023 உலகக்கோப்பை செமி ஃபைனலில் சதத்தை அடித்து உடைத்த விராட் கோலி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி செமி ஃபைனலில் அரை சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றியின் பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல இம்முறை அவர் பிளே ஆஃப் சுற்றில் அசத்துவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



