இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 52-வது சதத்தை பதிவு செய்திருந்தார். அதன்மூலம் பல்வேறு புதிய சாதனைகளையும் அவர் நிகழ்த்தியிருந்தார்.
53-ஆவது சதத்தை பதிவு செய்த விராட் கோலி :
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் அடித்த இந்த சதம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வேளையில் இன்று டிசம்பர் 3-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசர வைத்துள்ளார்.
அந்தவகையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் மீண்டும் ஒரு சதத்தை அடித்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 53-வது சதத்தை பதிவு செய்துள்ளார். இன்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி :
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்களையும், விராட் கோலி 102 ரன்களையும் குவித்தனர். விராட் கோலி 93 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை விராட் கோலி சமன் செய்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஒருநாள் போட்டிகளில் 53 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி அதில் 34 சதங்களை வெவ்வேறு மைதானங்களில் அடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : மினி ஏலத்தில் இந்த வீரருக்கு தான் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. பெரிய தொகைக்கு போவார் – அஷ்வின் கணிப்பு
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 34 வெவ்வேறு மைதானங்களில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி பகிர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்கா அணியானது 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



