வீடியோ : சின்னசாமி மைதானத்தில் மிரட்டிய கம்பீருக்கு லக்னோவில் பதிலடி கொடுத்து பழி தீர்த்த கிங் கோலி – விவரம் இதோ

Gautam Gambhir Suryakumar Yadav
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. ஆனால் அந்தப் போட்டியில் 13 (13) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் போராடிய நவீன்-உல்-ஹக் ஒரு பந்தில் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வந்தும் முகமது சிராஜ் ரன் அவுட் செய்ய முயற்சித்ததால் கோபமடைந்தார். அப்போது சாதாரணமாகவே ஆக்ரோசத்தை வெளிப்படுத்தக்கூடிய விராட் கோலிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோர் உள்ளே புகுந்து தடுத்து நிறுத்தினர்.

அதை தொடர்ந்து போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொண்ட போது மீண்டும் ஏதோ விராட் கோலி சொன்னதால் நவீன் கோபமடைந்த நிலையில் கிளன் மேக்ஸ்வெல் இருவரையும் சண்டை போடாமல் தடுத்து நிறுத்தினார். அதை விட அந்த சச்சரவுகள் அனைத்தையும் பெவிலியனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த லக்னோ அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தனது அணி வீரரிடம் வம்பிழுத்த விராட் கோலியுடன் நேருக்கு நேராக நெஞ்சோடு நெஞ்சாக மோதும் வகையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

கிங் கோலியின் பதிலடி:
இறுதியில் லக்னோ கேப்டன் ராகுல் சமாதானம் செய்ததால் பகையை மறந்து கை கொடுக்க வந்த விராட் கோலியிடம் நவீன்-உல்-ஹக் பேசுவதற்கு எதுவுமில்லை என்று மறுப்பு தெரிவித்து சென்றது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அப்படி மிகப்பெரிய சண்டையில் ஈடுபட்ட விராட் கோலிக்கு 100% போட்டியின் சம்பளத்திலிருந்து அபராதமாகவும் பயிற்சியாளராக இருந்து விலக்காமல் முதல் ஆளாக சண்டை போட்ட கெளதம் கம்பீர் மற்றும் சீனியர் என்று பாராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு தலா 50% சம்பளமும் ஐபிஎல் நிர்வாகம் அபராதமாக விதித்துள்ளது.

முன்னதாக டெல்லியில் பிறந்து இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடியும் 2013 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய கௌதம் கம்பீர் இதே போல விராட் கோலியுடன் சண்டை போட்டது யாராலும் மறக்க முடியாது. அப்போதிலிருந்தே ஓய்வுக்குப் பின் சம்பந்தமின்றி விராட் கோலியை பற்றி எதையாவது விமர்சித்து வரும் அவர் இந்த சீசனில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற போது ஆரவாரம் செய்த பெங்களூரு ரசிகர்களுக்கு வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு மிரட்டும் வகையில் வம்பிழுத்து பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் பொதுவாகவே இது போன்ற சண்டைகளுக்கு அஞ்சாத விராட் கோலி அதை மனதில் வைத்துக் கொண்டிருந்து இந்த போட்டியில் வெற்றி உறுதியான சமயத்தில் கௌதம் கம்பீருக்கு லக்னோ மைதானத்தில் அதே போல வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு மிரட்டும் வகையில் தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கௌதம் கம்பீர் மற்றும் லக்னோ அணிக்கு பெங்களூரு ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர். அதிலிருந்தே ஆரம்பித்த பனிப்போர் தான் நேற்றைய போட்டியின் இறுதியில் பெரிய சண்டையாக மாறியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் லக்னோவில் பெங்களூரு அணிக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்ததாக தெரிவிக்கும் விராட் கோலி நீங்கள் பதிலடி கொடுக்கும் போது இறுதியில் அதே பதிலடியை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கௌதம் கம்பீரை மறைமுகமாக தாக்கியுள்ளார். இது பற்றி ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:வீடியோ : ராகுலை தொடர்ந்து மற்றொரு வீரர் காயம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு விழுந்த இரட்டை அடி

“உங்களால் கொடுக்க முடிந்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கொடுக்க வேண்டாம். இந்த பயணத்தில் இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். குறிப்பாக இந்த போட்டியில் உள்ளூர் அணியை விட எங்களுக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்தது நம்ப முடியாத உணர்வாக இருந்தது. அது எங்களை ரசிகர்கள் எவ்வாறு ரசிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இந்த இனிமையான வெற்றி பல காரணங்களுக்காக மகத்தான உணர்வை கொடுக்கிறது. அவை அனைத்தையும் தாண்டி குறைவான இலக்கை கட்டுப்படுத்தும் போது எங்களது அணி காண்பித்த கேரக்டர் ஸ்பெஷலானது” என்று கூறினார்.

Advertisement