நியூசிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அந்தத் தோல்விக்கு பெரும்பாலான வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.
மறுபுறம் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்த நியூசிலாந்து வரலாறு காணாத வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு 3 போட்டிகளில் 2 சதங்கள் அடித்த டார்ல் மிட்சேல் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக கடைசி 2 போட்டியில் நியூசிலாந்து ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கலாய்த்து பாராட்டிய கோலி:
அப்போது 4வது இடத்தில் களமிறங்கிய மிட்சேல் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து நியூசிலாந்தின் வெற்றிக்கு உதவினார். அதன் காரணமாக இத்தொடரின் தொடர்நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார். முன்னதாக 2வது போட்டியில் மிட்சேல் சதமடித்த போது அருகில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
குறிப்பாக இந்திய அணியின் வெற்றியை சொந்த மண்ணில் பறிக்கும் அளவுக்கு நியூசிலாந்துக்காக அசத்திய அவருடைய தரமான சதத்தை விராட் கோலி மனதார பாராட்டினார். அந்த நிலையில் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் சதத்தை அடித்த பின் மிட்சேல் அவுட்டாகி பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பவுண்டரி எல்லை அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி மீண்டும் அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.
திறமைக்கு பரிசு:
அதே சமயம் “இந்தியாவை அடித்தது போதும் பெவிலியனுக்குள் செல்லுங்கள்” என்ற வகையில் மிட்சேல் முதுகில் கை வைத்து தள்ளிய விராட் கோலி ஜாலியாக கலாய்த்தார். அத்துடன் போட்டியின் முடிவில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது தம்முடைய கையொப்பமிட்ட இந்திய அணியின் ஜெர்சியை டார்ல் மிட்சேலுக்கு பரிசாக கொடுத்த விராட் கோலி அவருடைய தரமான ஆட்டத்தை பாராட்டினார்.
இதையும் படிங்க: புதுசா முயற்சிக்காத ஜடேஜாவின் இந்த பலமே பலவீனமாகிடுச்சு.. போட்டிக்கு அக்சர் ரெடியா இருக்காரு.. அஸ்வின்
அதை வாங்கிக்கொண்ட மிட்சேல் அவரைக் கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். மொத்தத்தில் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்தாலும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எதிரணியின் வீரருக்கு விராட் கோலி தன்னுடைய ஜெர்சியை பரிசாகக் கொடுத்த செயலை ரசிகர்கள் பாராட்டுகின்றனர். இதை அடுத்து இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



