புதுசா முயற்சிக்காத ஜடேஜாவின் இந்த பலமே பலவீனமாகிடுச்சு.. போட்டிக்கு அக்சர் ரெடியா இருக்காரு.. அஸ்வின்

R Ashwin
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்தியா தங்களது சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு இந்திய பவுலர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டை எடுக்கத் தவறியது முக்கிய காரணமானது. குறிப்பாக மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய அனுபவமிக்க ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா மிகவும் சுமாராக பந்து வீசியது இந்தியாவுக்கு பின்னடைவை உண்டாக்கியது.

அது மட்டுமின்றி பேட்டிங் துறையிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடாதது பெரிய பின்னடைவாகவே அமைந்தது. இந்நிலையில் பல நேரங்களில் ரவீந்திர ஜடேஜாவின் திறமையைப் பார்த்து பொறாமைப் பட்டுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்தத் திறமையில் ஜடேஜா எப்போதுமே புதுமைகளை புகுத்தியதில்லை என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

பலமே பலவீனம்:

அதனால் பல சமயங்களில் அவருடைய பலமே பலவீனமாக மாறி விடுவதவாகவும் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் போட்டிக்கு அக்சர் பட்டேல் தயாராக இருப்பதை மனதில் வைத்து ஜடேஜா வருங்காலங்களில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “இது ஜடேஜாவுக்கு மிகவும் சவாலான நேரமாகும்”

“அவருடைய கால்களுக்குப் பின்னால் அக்சர் பட்டேல் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். உண்மை என்னவெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாகவே விளையாடியுள்ள ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். ஆனால் ஜடேஜாவுக்கு அது எளிதாக இருக்காது. ஏனெனில் சவால் அவருடைய பேட்டிங்கில் இருக்கிறது”

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட்டிங்கில் அவருடைய குறைவான ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சனங்கள் காணப்படுகின்றன. எப்படி இருந்தாலும் யாருடைய வருங்காலத்தைப் பற்றியும் இப்போதே பேசுவதில் அர்த்தமில்லை. அடுத்ததாக நமக்கு டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. அதில் ஐபிஎல் தொடரில் ஜடேஜா விளையாடுவார் என்பதை மறக்காதீர்கள்”

“அங்கே அவர் வெளிபடுத்தக்கூடிய செயல்பாடுகள் வருங்கால முடிவுகளுக்கு வித்திடலாம். எனவே யாரைப் பற்றியும் இப்போதே முடிவு எடுப்பது சரியானதாக இருக்காது. ஜடேஜாவின் பலம் சில நேரங்களில் அவருடைய பலவீனமாக மாறுகிறது. அவரிடம் பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் ஆகியவற்றில் திறன் இருக்கிறது. ஆனால் அவர் ஒரு விஷயத்தை செய்யவில்லை தெரியுமா?”

இதையும் படிங்க: இப்படி ஒரு வீரரை எந்த ஐ.பி.எல் அணியும் வாங்காததை நெனச்சா ஆச்சரியமா இருக்கு – சீக்கா கருத்து

“அதாவது அவர் எப்போதும் தன்னுடைய பலத்தை விட்டு வெளியே சென்றதில்லை. அவர் எப்போதும் புதிய விஷயங்களை சேர்த்ததில்லை. ஜாம்பவானாக திகழும் அவருக்கு இழக்க எதுவுமில்லை. எனவே அவர் ஏதாவது புதிதாக முயற்சிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். சொல்லப்போனால் வலைப்பயிற்சியில் அவர் பலமுறை கேரம் பந்துகளை வீசி நான் பார்த்துள்ளேன். ஆனால் எப்போதுமே அதை அவர் போட்டிகளில் செயல்படுத்தியதில்லை” என்று கூறினார்.

Advertisement