நஜ்முல் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அதற்கு அடுத்து இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஷாகிப் அல் ஹசனுக்கு தனது பேட்டை பரிசளித்த விராட் கோலி :
இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வங்கதேச டெஸ்ட் தொடருகான அணியில் இடம் பிடித்து விளையாடியிருந்த அந்த அணியின் சீனியர் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது கையொப்பமிட்ட பேட்டை பரிசாக வழங்கியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் விராட் கோலி இப்படி அவருக்கு பேட்டை பரிசளித்ததற்கு பின்னால் இருக்கும் காரணமும் வெளியாகி அனைவரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷாகிப் அல் ஹசன் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் கடைசியாக பங்கேற்று விட்டு தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக அவரை கௌரவிக்கும் வகையில் விராட் கோலி இந்த பரிசினை வழங்கியுள்ளார். விராட் கோலியின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கெதிரான 2 போட்டியிலும் நாங்க இப்படி மோசமா தோக்க இதுவே காரணம் – வங்கதேச கேப்டன் வருத்தம்
வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் கடந்த 2007-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை அந்த அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4600 ரன்களை குவித்துள்ளது மட்டுமின்றி 242 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.