இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது நடைபெற்ற போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதனைத்தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது கொழும்பு நகரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்தது.
பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 26.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடியிருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த தொடரில் மோசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இதுவரை எந்தவொரு தொடரிலும் தொடர்ச்சியாக அவர் 3 முறை எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தது இல்லை. ஆனால் இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று முடிந்த இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களிலும் அவர் தொடர்ச்சியாக எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்து அந்த மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : ஒருநாள் தொடர் முடிவடைந்த கையோடு இலங்கை வீரருக்கு நினைவுப்பரிசு வழங்கிய விராட் கோலி – விவரம் இதோ
சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணிலடங்கா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலியின் விக்கெட்டை எளிதில் யாராலும் வீழ்த்த முடியாத வேளையில் இந்த தொடரில் அவர் எளிதாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



