RCB vs CSK : இது ஒரு குத்தமாய்யா? வெறித்தனம் காட்டிய விராட் கோலிக்கு அம்பயர்கள் அதிரடி தண்டனை – நடந்தது என்ன

Virat Kohli Siraj
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 8 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைந்தது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 226/6 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83 (45) ரன்களும் சிவம் துபே 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 52 (27) ரன்களும் ரகானே 37 (20) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 227 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு ஆகாஷ் சிங் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி 6 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மஹிபால் லோம்ரர் டக் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னைக்கு அச்சுறுத்தலை கொடுத்த கேப்டன் டு பிளேஸிஸ் 62 (33) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 76 (36) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இதெல்லாம் ஒரு குத்தமாய்யா:
அதை பயன்படுத்திய சென்னை டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் 28 (14) சபாஷ் அஹமத் 12 (10) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிரடி காட்ட விடாமல் குறைவான ரன்களில் அவுட்டாக்கியது. அதனால் போராடி தோற்ற பெங்களுருவை பந்து வீச்சில் கட்டுப்படுத்திய சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் டேஷ்பாண்டே 3 விக்கெட்களும் பதிரான 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சென்னை பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் சிவம் துபே பெங்களூரு பவுலர்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கினார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் 101, 105, 111 என முந்தைய சிக்சருக்கு அடுத்த சிக்சரை அதிக தொலைவில் அடித்த அவர் 192.59 ஸ்ட்ரைக் ரேட்டில் 52 (27) ரன்களை விளாசி பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். அதைப் பார்த்த பெங்களூரு ரசிகர்கள் இதற்கு முன் தங்கள் அணிக்கு விளையாடும் போது சொதப்பிய அவர் தங்களுக்கு எதிராக மட்டும் இந்தளவுக்கு அந்நியனாக விளையாடுவதை நினைத்து கடுப்பானார்கள். அவர்களைப் போலவே மிகுந்த கோபத்தில் இருந்த விராட் கோலி 17வது ஓவரில் சிவம் துபே ஆட்டமிழந்த போது அந்த விக்கெட்டை பந்து வீசிய வேன் பர்ணல் மற்றும் பவுண்டரி எல்லையில் நின்று கச்சிதமாக கேட்ச் பிடித்த முகமத் சிராஜ் ஆகியோரை விட வெறித்தனமாக கொண்டாடினார்.

- Advertisement -

பொதுவாகவே இந்தியாவுக்காகவும் சரி ஐபிஎல் தொடரிலும் சரி ஒரு விக்கெட்டை எடுத்தால் எதிரணியையும் எதிரணி ரசிகர்களையும் தெறிக்க விடும் அளவுக்கு வேகமாக ஓடி வெறித்தனமாக கொண்டாடுவதில் விராட் கோலி பெயர் பெற்றவர். அந்த வரிசையில் சிவம் துபே விக்கெட்டை அவர் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் பந்து போட்டவர் மற்றும் கேட்ச் பிடித்தவரை விட சம்பந்தமின்றி வெறித்தனமாக கொண்டாடியதால் அதிருப்தியடைந்த போட்டியின் நடுவர் ஐபிஎல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் விதிமுறை எண் 2.2 படி விராட் கோலிக்கு இந்த போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அபராதமாக விதிக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இருப்பினும் எதற்காக இந்த தண்டனை கொடுக்கப்பட்டது என்பதை தெளிவாக தெரியப்படுத்தாத ஐபிஎல் நிர்வாகம் 2.2 விதிமுறையை மீறியதால் 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மட்டும் கூறியுள்ளது. நேற்றைய போட்டியில் அந்த தருணத்தை தவிர்த்து வேறு எதுவும் அத்துமீறிய செயலில் ஈடுபடாத காரணத்தால் சிவம் துபே விக்கெட்டை தாறுமாறாக கொண்டாடியதே இந்த தண்டனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: IPL 2023 : வேகம் சுழல் ரெண்டையும் ஒரே மாதிரி அடிக்கும் அவரிடம் தோனி மாதிரியே திறமை இருக்கு – ஹர்பஜன் பாராட்டு

ஆனால் ஒவ்வொரு விக்கெட் விழும் போதும் அவ்வாறு வெறித்தனமாக கொண்டாடுவது விராட் கோலியின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் தனது அணிக்காக விழுந்த ஒரு விக்கெட்டை அர்ப்பணிப்புடன் மகிழ்ச்சியுடன் வெறித்தனமாக கொண்டாடியது ஒரு குத்தமா? அதற்கு ஒரு அபராதமா என்று நடுவர்கள் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு விராட் கோலி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Advertisement