- Advertisement -
ஐ.பி.எல்

இவரும் சாதாரண கேப்டன் தான் போல! ரோஹித் சர்மாவின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் விராட் கோலியின் ரசிகர்கள்

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 3-வது வாரத்தைக் கடந்து பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என சாதனை படைத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை யாருமே எதிர்பாராத வண்ணம் லீக் சுற்றுடன் வெளியேறும் முதல் அணியாக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

ஏனெனில் கடந்த 2008 ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்ட போதிலும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாத அந்த அணிக்கு 2013-ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே கோப்பையை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மா அதன்பின் விஸ்வரூபம் எடுத்து 2020 வரை நடந்த 8 வருடத்திற்குள் மொத்தம் 5 கோப்பைகளை வென்று குறுகிய காலத்திற்குள் மும்பையை வெற்றிகரமான ஐபிஎல் என்ற சரித்திர சாதனை படைக்க வைத்தார்.

- Advertisement -

அதே காரணத்துக்காக எம்எஸ் தோனி, கௌதம் கம்பீர் போன்ற மூத்த கேப்டன்களையும் அசால்டாக முந்திய அவர் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் என்ற அபார சாதனை படைத்தார். அதிலும் இந்தியாவிற்காக 3 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து வரலாற்றின் மகத்தான இந்திய கேப்டன் என பெயரெடுத்த எம்எஸ் தோனி கூட 2008 – 2021 வரை 12 வருடங்கள் போராட்டத்திற்கு பின்புதான் அதுவும் 4 கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் அவரையே மிஞ்சும் அளவுக்கு 2013 – 2020 வரையிலான 8 வருடத்திற்குள் 5 கோப்பைகளை வென்ற காரணத்தால் தோனியை விட ரோகித் சர்மா தான் மிகச்சிறந்த ஐபிஎல் கேப்டன் என ரசிகர்களாலும் வல்லுனர்களாலும் கொண்டாடப்படுகிறார்.

முதல்முறையாக சொதப்பல்:
அந்த நிலையில் இந்த வருடம் தொடங்கிய 2022 தொடரில் 6-வது முறையாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் எனவும் அதற்கு 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை தடையாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கதையில் ட்விஸ்ட் போல ஆரம்பத்திலேயே இந்த 2 அணிகளும் தனது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன.

- Advertisement -

இதில் சென்னை தோல்வி அடைந்ததில் கூட ஒரு நியாயம் உள்ளது எனக் கூறலாம். ஏனெனில் அந்த அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து இதயமாக விளங்கிய எம்எஸ் தோனி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகி அந்த பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். மறுபுறம் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி உதவியாக இருந்த போதிலும் கூட சென்னையால் வெற்றி பெற முடியவில்லை.

ஆனால் மும்பை அணியில் நிலைமை அப்படி கிடையாது. ஏனெனில் 8 வருடத்திற்குள் கேப்டனாக மேஜிக் செய்த அதே ரோகித் சர்மா தான் இந்த வருடமும் கேப்டனாக செயல்படுகிறார். அந்த நிலைமையில் அனுபவம் இல்லாத ஜடேஜா கூட 5-வது போட்டியில் பெங்களூரு சாய்த்து சென்னைக்கு முதல் வெற்றியை பதிவு செய்த அதே வேளையில் அதேபோல மும்பையும் வெற்றி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 5-வது போட்டியில் தோல்வியடைந்த அந்த அணி மீண்டும் ஏமாற்றமே அளித்தது.

- Advertisement -

அப்போதும் கூட 2014-ஆம் ஆண்டு இதேபோல தனது முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை பெற்றாலும் அதன் பின்தொடர்ச்சியான 8 வெற்றிகளுடன் பிளே சுற்றுக்குத் தகுதி பெற்று பைனல் வரை முன்னேறிய மும்பை அதே மேஜிக்கை இந்த வருடமும் நிகழ்த்தும் என அந்த ரசிகர்கள் மீண்டும் நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை பாழாக்கும் வகையில் நேற்று லக்னோவுக்கு எதிரான 6-வது போட்டியிலும் தோல்வியை சந்தித்த மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து பரிதாப சாதனை படைத்தது.

சாதாரண கேப்டன்:
தற்போதைய நிலைமையில் 2014, 2015 போல அடுத்த 8 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றால் கூட அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது 99% சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இங்குதான் ரோகித் சர்மா மீது நிறைய விராட் கோலி ரசிகர்கள் விமர்சனங்களை அம்பாக எய்கின்றனர். ஏனெனில் ரோகித் 5 கோப்பைகளை வென்று கொடுத்த அதே காலகட்டத்தில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி ரோஹித்தை விட பேட்டிங்கில் மலைபோல ரன்களை குவித்து முழுமூச்சாக போராடிய போதிலும் பெங்களூருவுக்கு கோப்பையை வென்று தரமுடியவில்லை. அதற்கு காரணம் அந்த அணியில் இருந்த படுமோசமான பவுலர்கள் என ஐபிஎல் பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

- Advertisement -

அப்படி இருக்க அதே காலக் கட்டத்தில் ரோகித் சர்மா அடுத்தடுத்த வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட் போன்ற தரமான பவுலர்கள் விராட் கோலியின் தலைமையில் விளையாடி இருந்தால் நிச்சயம் பெங்களூர் கோப்பையை வென்றிருக்கும் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் சமீபத்தில் நடந்த ஏலத்தின் போது ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்களை இழந்த மும்பையின் பந்துவீச்சில் தற்போது ஜஸ்பிரித் பும்ரா மட்டும் தனி ஒருவனாக போராடினாலும் இதர பவுலர்கள் கைகொடுக்க தவறுவது அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படியானால் நல்ல பவுலர்கள் இல்லாமல் தோல்விகளை சந்தித்த விராட் கோலிக்கு ஏற்பட்ட அதே நிலைமைதான் இப்போதும் ரோஹித் சர்மாவுக்கும் ஏற்பட்டுள்ளது,

அப்படியானால் அவரும் மற்ற கேப்டன்களைப் போல சாதாரண ஒரு கேப்டன் தானே என்று விராட் கோலி ரசிகர்கள் நியாயமான கருத்தை முன்வைக்கின்றனர். மேலும் 2014 – 2021 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் கேப்டன் பொறுப்பையும் பார்த்துக்கொண்டு பெங்களூருவையும் விராட் கோலி வழிநடத்துகையில் ரோகித் சர்மா மும்பையை மட்டும் வழிநடத்தினார்.

இதையும் படிங்க : 1000 கிலோமீட்டர் பயணித்து போட்டியை பாக்க வந்துருக்கோம் – ரசிகர்களின் அன்புக்கு மரியாதை அளித்த தினேஷ் கார்த்திக்

ஆனால் தற்போது அவருக்கும் விராட் கோலியை போல இந்தியாவையும் பார்த்துக்கொண்டு ஐபிஎல் அணியும் பார்க்க வேண்டிய நிலைமை வந்துள்ளதால் கேப்டன்சிப் அழுத்தம் இப்போதுதான் முதல்முறையாக அவருக்கு ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். எனவே இந்த வருடத்தில்தான் ரோகித் சர்மா உண்மையாகவே மேஜிக் நிகழ்த்தும் கேப்டனா அல்லது மற்றவர்களை போல சாதாரண கேப்டனா என்று பார்க்க உள்ளதாகவும் ரசிகர்கள் பேசுகின்றனர்.

- Advertisement -
Published by