மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26-ஆம் தேதி இன்று துவங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது முதல் நாளே படு சுவாரஸ்யமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு :
இந்நிலையில் இந்த போட்டியின் போது அறிமுகமான ஆஸ்திரேலிய அணியின் இளம் துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸை இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது தோள்பட்டையால் மோதியது குறித்து பல்வேறு விவாதங்கள் இன்று காலை முதல் காரசாரமாக நடைபெற்று வருகின்றன.
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டின் அனுபவ வீரரான விராட் கோலி 19 வயதுடைய ஒரு வீரரை இப்படி சீண்டுவதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாகவே களத்தில் ஆக்ரோஷம் காட்டும் விராட் கோலி இப்படி சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய வீரரிடம் தனது ஆக்ரோஷத்தை காட்டியது பலரது மத்தியிலும் கண்டனத்தை பெற்று வருகிறது.
மேலும் விராட் கோலியின் அவரது இந்த செயலால் ஒரு போட்டி தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஐசிசி இந்த விவகாரத்தின் அடிப்படையில் விராட் கோலிக்கான தண்டனை என்ன? என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் மேட்ச் ரெப்ரி விராட் கோலி குற்றத்தை பற்றி அவரிடம் கூறியதும் விராட் கோலி தனது தவறை ஒப்புக்கொண்டதால் அவருக்கு லெவல் 1 அடிப்படையில் ஒரு டீமெரிட் புள்ளியும் போட்டி ஊதியத்தில் இருந்து 20% அபராதத்தை மட்டுமே தண்டனையாக விதித்துள்ளார்.
இதையும் படிங்க : இப்படி நடந்ததுக்கு அப்புறம் ஜெயிக்க வாய்ப்பே இல்ல.. முதல் நாளே இந்தியாவின் கதையை முடித்த ஆஸ்திரேலியா
இதன்மூலம் கட்டாயம் ஒரு டெஸ்ட் போட்டியில் தடை விதிக்கப்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி அந்த தடையில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விராட் கோலி செய்தது தவறு என்றே பலரது கருத்தாகவும் உள்ளது.



