வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் வங்கதேசத்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள்.
குறிப்பாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற அந்தத் தொடரில் வெற்றி பெறுவது முக்கியமாகிறது. அதனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்து சில நாட்களாக கடினமான பயிற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த பயிற்சியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இணைந்து பயிற்சிகளை எடுத்து வருகிறார்.
சுவரை உடைத்த விராட் கோலி:
அதில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது நாள் பயிற்சியில் விராட் கோலி ஒரு அதிரடியான சிக்சரை அடித்துள்ளார். அது சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இந்திய அணியின் உடைமாற்றும் அறைக்கு அருகில் உள்ள சுவரை உடைத்துள்ளது. அந்த வீடியோ ஜியோ சினிமா இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிரடியாக பயிற்சிகளை எடுத்த விராட் கோலியை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மேற்பார்வையிட்டார்.
அதன் முடிவில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் நீண்ட நேரமாக பேசினார்கள். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி கொஞ்சம் தடுமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார். எனவே அதில் முன்னேறுவதற்கு தேவையான திட்டங்களை கௌதம் கம்பீர் அவருக்கு கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
58 ரன்களில் சாதனை:
இதைத் தொடர்ந்து இந்த வருடம் முதல் முறையாக விராட் கோலி இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். ஏனெனில் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் சொந்த காரணங்களுக்காக 5 போட்டிகளிலும் விளையாடவில்லை. எனவே இந்த வருடத்தில் முதல் முறையாக வங்கதேச டெஸ்ட் தொடரில் களமிறங்கும் அவர் பெரிய ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆஸி தொடருக்கு ரெடியாகும் பயணத்தில் அந்த வங்கதேச ஸ்பின்னர் டஃப் கொடுக்கலாம்.. இந்திய அணியை எச்சரித்த ஓஜா
அது போன்ற சூழ்நிலையில் முதல் போட்டியில் 58 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார். மேலும் வங்கதேச தொடரில் 152 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை குவித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெறுவார்.



