
இந்தியாவில் விஜய் ஹசாரே 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி துவங்கியது. அத்தொடரில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் டெல்லி – ஆந்திரப்பிரதேச அணிகள் மோதிய போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. காலையில் 9:00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அப்போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி 12 வருடங்கள் கழித்து விஜய் ஹசாரே கோப்பையில் களமிறங்கியது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலில் விளையாடிய ஆந்திரா 50 ஓவரில் 298/8 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ரிக்கி புய் சதமடித்து 122 (105) ரன்கள் குவித்து அசத்தினார்.
அடுத்ததாக விளையாடிய டெல்லி அணிக்கு அர்பிட் ராணா முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அடுத்து வந்த விராட் கோலி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா அரை சதமடித்து 74 (44) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த நித்திஷ் ராணா அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் தொடர்ந்து ஆந்திரா பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட விராட் கோலி சதமடித்தார். நேரம் செல்ல செல்ல கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 14 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு 131 (101) ரன்களை குவித்து அவுட்டானார். இறுதியில் நிதீஷ் ராணா 77 (55) ரன்கள் எடுத்த உதவியுடன் 37.4 ஓவரிலேயே 300/6 ரன்களை குவித்த டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
அந்த வகையில் விஜய் ஹசாரே கோப்பையில் 12 வருடங்கள் கழித்து விளையாடிய விராட் கோலி சதமடித்து 131 ரன்களை குவித்து டெல்லி எளிதாக வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். இதையும் சேர்த்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவர் 330 இன்னிங்ஸில் 16130* ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 16000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 299 சேசிங்கில் 131 ரன்ஸ்.. சச்சினுக்கு பின் மாபெரும் சாதனை படைத்த கிங் கோலி.. டெல்லி எளிதான வெற்றி
இதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 391 இன்னிங்ஸில் 16000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இது மட்டுமின்றி ஏற்கனவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 10000, 11000, 12000, 13000, 14000, 15000 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனைகளையும் விராட் கோலி படைத்துள்ளார். அந்த வகையில் விஜய் ஹசாரே கோப்பை கம்பேக் போட்டியில் வேகமாக உலக சாதனை படைத்துள்ள விராட் கோலி தம்மை 2027 உலகக் கோப்பைக்கும் முன் கழற்றி விடத் துடிக்கும் கௌதம் கம்பீர், அஜித் அகர்க்கர் ஆகியோருக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்றால் மிகையாகாது.