
பெங்களூரு நகரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி துவங்கியது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் சௌதீ வேகத்தில் அவுட்டானார்.
அதற்கடுத்ததாக வந்த விராட் கோலி டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த சர்பராஸ் கானும் டக் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அதனால் 10-3 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்திய அணிக்கு மறுபுறம் 63 பந்துகள் எதிர்கொண்டு போராடிய ஜெய்ஸ்வாலும் 13 ரன்களில் அவுட்டானார்.
அப்போது வந்த கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் இரண்டாவது நாள் உணவு இடைவெளியில் இந்தியா 34-6 என பெரிய சரிவை சந்தித்து ஆரம்பத்திலேயே திணறி வருகிறது. சொல்லப்போனால் 1969க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் 6வது விக்கெட்டுக்கு இந்தியா குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனையும் படித்துள்ளது.
இதற்கு முன் கடந்த 1969ஆம் ஆண்டு 55 வருடத்திற்கு முன் இதே நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் 27-6 என இந்தியா சரிந்ததே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். குறிப்பாக பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. அதை பயன்படுத்தி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து ஆரம்பத்திலேயே சரிவை ஏற்படுத்தியுள்ளனர்.
முன்னதாக இப்போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 536வது போட்டியில் களமிறங்கினார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 2வது அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக தோனி 535 போட்டிகளில் விளையாடி அந்த சாதனையை படைத்திருந்தார்.
இதையும் படிங்க: இந்த வருஷத்துல மட்டும் இது 10 ஆவது முறை.. ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை – விவரம் இதோ
தற்போது தோனியின் அந்த வாழ்நாள் சாதனையை விராட் கோலி உடைத்துள்ளார். அதே பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளுடன் இந்தியாவுக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக முதலிடத்தில் உள்ளார். இதைத் தொடர்ந்து இப்போட்டியில் எப்படியாவது மீண்டு வருவதற்கு இந்திய அணி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.