
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்தது. அந்த நிலையில் இரண்டாவது போட்டியில் பிப்ரவரி 23ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடியது. குறிப்பாக இமாம் உல் ஹக் 10, பாபர் அசாம் 23 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 46, சவுத் ஷாக்கில் 62 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
ஆனால் லோயர் மிடில் ஆர்டரில் டாயப் தாஹிர் 4, சல்மான் ஆகா 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் குஷ்தில் ஷா 38 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முன்னதாக இந்தப் போட்டியில் குஷ்தில் ஷா, நாசீம் ஷா ஆகியோர் கொடுத்த கேட்ச்களை நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி லாவகமாக பிடித்தார்.
இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 299 போட்டிகளில் 158 கேட்ச்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகளைப் படித்த இந்திய ஃபீல்டர் என்ற முகமது அசாருதீன் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் முகமது அசாருதீன் 1985 – 2000 காலகட்டங்களில் 334 போட்டிகளில் 156 கேட்சுகள் பிடித்ததே முந்தைய சாதனை.
தற்போது அவரை விட குறைவான போட்டிகளில் இந்தியாவுக்காக இந்த ஆல் டைம் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இது அவருடைய ஃபிட்னஸ் திறமைக்கு ஒரு சான்றாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அதே பட்டியலில் 1989 – 2012 காலகட்டங்களில் விளையாடிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 140 கேட்ச்களை பிடித்து 3வது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ரசிகனாக மாறி ஆதரவளித்த ஜஸ்ப்ரித் பும்ரா.. பெற்ற 4 ஐசிசி விருதுகள்
உலகளவில் இலங்கையின் ஜெயவர்த்தனே 218, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 160 கேட்ச்களுடன் முதல் 2 இடங்களில் உள்ளார்கள். விராட் கோலி 158 கேட்ச்களுடன் 3வது இடத்தில் உள்ளார். எனவே இன்னும் 3 கேட்ச்களை பிடிக்கும் பட்சத்தில் இந்தத் தொடரிலேயே ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்து விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறி மற்றுமொரு சாதனைப் படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.