இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையின் நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முயற்சித்து வருகின்றனர்.
அதனாலேயே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சதமடித்து தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார். அதனால் தம்முடைய கேரியரில் முதல் முறையாக ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் அவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்தார்.
விட்டதைப் பிடித்த கிங்:
மறுபுறம் அத்தொடரில் அடுத்தடுத்து டக் அவுட்டான விராட் கோலி கடைசி போட்டியில் அரை சதமடித்தார். அதே வேகத்தில் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் ஒரு அரை சதம், 2 சதமடித்த அவர் தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார். அதனால் ஐசிசி தரவரிசையில் ரோஹித்துக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பிடித்த விராட் கோலி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் குவித்து அசத்தினார்.
மறுபுறம் ரோஹித் சர்மா அப்போட்டியில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ரோஹித் சர்மாவை முந்திய விராட் கோலி உலகின் புதிய நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதற்கு 2016 – 2021 வரையிலான பெரும்பாலான வருடங்களில் விராட் கோலி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வந்தார்.
மீண்டும் நம்பர் ஒன்:
அதன் பின் தடுமாற்றமாக விளையாடியதால் சரிவை சந்தித்த விராட் கோலி தற்போது 785 புள்ளிகளுடன் 1408 நாட்கள் கழித்து மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அத்துடன் 37 வயதிலும் தமாசாதிக்க முடியும் என்பதை அவர் கம்பீர், அகர்கருக்கு காண்பித்துள்ளார். மறுபுறம் ரோஹித் சர்மா 775 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு சரிந்துள்ள நிலையில் நியூசிலாந்தின் டேரில் மிட்சேல் 784 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: திலக் வர்மாவிற்கு சரியான மாற்றுவீரராக இவர்தான் இருப்பார்.. அதுதான் கரெக்ட் – இர்பான் பதான் கருத்து
அந்த வகையில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். அதே தரவரிசையில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் 4, 10, 11வது இடங்களைப் பிடித்துள்ளார்கள். அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.



