IND vs BAN : மீண்டும் அசத்திய விராட் கோலி, டி20 உ.கோ’யின் ராஜாவாக படைத்த உலக சாதனை – 5 சாதனைகளின் பட்டியல் இதோ

Virat Kohli IND vs BAN
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்தது. அதனால் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா நவம்பர் 2ஆம் தேதியன்று தன்னுடைய 4வது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. புகழ் பெற்ற அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே 2 (8) ரன்கள் அவுட்டாகி சென்றார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் கை கோர்த்த மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போட்டியில் அதிரடி காட்டிய அவர் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் அரை சதமடித்து 50 (32) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய சூரியகுமார் யாதவ் தனக்கே உரித்தான பாணியில் களமிறங்கியது முதலே அதிரடி காட்டி 4 பவுண்டரியுடன் 30 (16) ரன்கள் குவித்து திடீரென்று ஆட்டமிழந்தார்.

- Advertisement -

டி20 உலககோப்பையின் ராஜா:
அந்த நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 5 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 7 (5) ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி சென்றார். அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் அதிரடி காட்ட முயன்றாலும் 7 (6) ரன்களில் நடையை கட்டியதால் தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் நங்கூரமாக நின்ற விராட் கோலி அரை சதம் கடந்து கடைசி நேரத்தில் அதிரடியை அதிகப்படுத்தி வேகமாக ரன்களை சேர்த்தார். கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அவர் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 64* (44) ரன்கள் குவித்து ஃபின்சிங் கொடுத்தார். அவருடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 13* (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 184/6 ரன்கள் குவித்தது.

அதை விட இப்போட்டியில் 64* ரன்கள் குவித்த விராட் கோலி ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனேவின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி (இந்தியா) : 1062*
2. மகிளா ஜெயவர்த்தனே (இலங்கை) :
3. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) : 965
4. ரோஹித் சர்மா (இந்தியா) : 921
5. திலகரத்னே தில்சான் (இலங்கை) : 897

- Advertisement -

முன்னதாக நெதர்லாந்துக்கு எதிரான கடந்த போட்டியிலேயே 12 ரன்கள் குவித்த போது 1000 ரன்களை கடந்த அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். அதை விட வெறும் 22 இன்னிங்ஸ்சிலேயே 1000 ரன்களை கடந்த அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற ஜெயவர்தனேவின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 22 இன்னிங்ஸ்
2. மகிளா ஜெயவர்தனே : 31 இன்னிங்ஸ்

அதுபோக இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 220*
2. மேக்ஸ் ஓ’தாவுத் : 213
3. குசால் மெண்டிஸ் : 205

முன்னதாக ஏற்கனவே டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக அரை சதங்களை அடித்த பேட்ஸ்மேன் (13), அதிக பேட்டிங் சராசரியை கொண்ட பேட்ஸ்மேன் (89), அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் (6), அதிக தொடர் நாயகன் விருதுகளை (2) வென்ற வீரர் என்ற உலக சாதனைகளையும் விராட் கோலி படைத்து டி20 உலக கோப்பையின் முடி சூடா மன்னனாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement