வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் பிப்ரவரி 17ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இம்முறை ஓரளவு சிறப்பாக செயல்பட்டு 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 72* ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 32, ராகுல் 17, புஜாரா 0, விராட் கோலி 44, ஸ்ரேயாஸ் ஐயர் 4, கேஎஸ் பரத் 6 என முக்கிய வீரர்களை குறைந்த ரன்களில் காலி செய்த நேத்தன் லயன் 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டல் கொடுத்தார். இருப்பினும் 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் தூக்கி நிறுத்திய அக்சர் படேல் 74 ரன்களும் அஸ்வின் 37 ரன்களும் எடுத்ததால் தப்பிய இந்தியா 262 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து 1 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்தியாவின் தரமான சுழல் பந்து வீச்சில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 113 ரன்களுக்குச் சிறந்தது.
சொந்த மண்ணில் உலக சாதனை:
அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடஜா 7 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். இறுதியில் 115 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 31, புஜாரா 31* என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர். அதனால் 118/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ளது. அத்துடன் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் இந்தியா 99% உறுதி செய்துள்ளது.
முன்னதாக இப்போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் களமிறங்கினார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு ஜாம்பவான் சச்சினுக்கு பின் ரன் மெஷினாக எதிரணிகளைப் பந்தாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ள தங்கள் ஊரைச் சேர்ந்த நாயகனுக்கு டெல்லி ரசிகர்கள் கோலாகலமான வரவேற்பு கொடுத்தனர்.
அந்த உற்சாகத்துடன் களமிறங்கிய அவர் முதல் இன்னிங்ஸில் நிதானமாக செயல்பட்டு 4 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து அரை சதத்தை நெருங்கிய போது துரதிஷ்டவசமாக சர்ச்சைக்குரிய முறையில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார். அது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் 2வது இன்னிங்ஸில் 3 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த அவர் மொத்தமாக 64 ரன்கள் எடுத்தார். அந்த வகையில் 2019க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் சதமடிக்காமல் இருந்து வரும் கதைக்கு சொந்த மண்ணில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஏமாற்றத்தை கொடுத்தாலும் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
1. மேலும் இப்போட்டியில் எடுத்த 64 ரன்களையும் சேர்த்து அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் 25,000 ரன்களை கடந்த 6வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் முறையே 8195, 12809, 4008 என 25012* ரன்களை குவித்து இந்த சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: IND vs AUS : மீண்டும் மண்ணை கவ்விய நம்பர் ஒன் அணி – 10 வருடமாக ஆஸ்திரேலியாவை அடக்கி ஆளும் இந்தியாச்
2. அதை விட சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை தகர்த்துள்ள அவர் தனது சொந்த ஊரில் புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 549* இன்னிங்ஸ்
2. சச்சின் டெண்டுல்கர் : 577 இன்னிங்ஸ்
3. ரிக்கி பாண்டிங் : 588 இன்னிங்ஸ்
4. ஜாக் காலிஸ் : 594 இன்னிங்ஸ்
5. குமார் சங்ககாரா : 608