இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2008இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியின் பேட்டிங் துறையின் முக்கிய முதுகெலும்பு வீரராக வலம் வருகிறார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அவரின் இடத்தில் அவரைப்போலவே பெரும்பாலான போட்டிகளில் இந்திய பேட்டிங்கை தனது தோள்மீது சுமக்கும் இவர் கடந்த பல வருடங்களாக உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரமான பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு பல சரித்திர வெற்றிகளைத் தேடி கொடுத்துள்ளார். அதனால் உலகத்தரம் வாய்ந்த வீரராக போற்றப்படும் இவரை வல்லுனர்களும் ரசிகர்களும் கிங் கோலி என்று அழைத்து வருகின்றனர்.
சச்சினை போலவே ஒரு ரன் மெஷினாக கடந்த பல வருடங்களாக ரன் மழை பொழிந்து வரும் இவர் 31 வயதிலேயே 70 சதங்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதேப்போல் உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக பேட்டிங் செய்து அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.
அடம் பிடிக்கும் 71:
அதேபோல் 2014 முதல் டெஸ்ட் போட்டிகளிலும் 2017 – 2021 வரை 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த பொறுப்பிலும் இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமையில் பொறுப்பேற்றபோது 7-வது இடத்தில் இருந்த இந்தியா அதன்பின் விஸ்வரூபம் எடுத்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளை பெற்றது. குறிப்பாக 70 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2019இல் அவர் தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.
மேலும் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் மிகச்சிறந்த கேப்டன் என்ற வரலாற்றை எழுதியுள்ளார். ஒரு கட்டத்தில் களமிறங்கினால் சதமடிப்பார் என்ற பிம்பத்தை உருவாக்கி தனக்கென ஒரு முத்திரை பதித்த விராட் கோலி கடைசியாக கடந்த 2019இல் சதம் அடித்தார்.
அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என 100க்கும் மேற்பட்ட போட்டிகளாக சதமடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர் இடையிடையில் அரை சதம் அடித்தாலும் அனைவரும் அதைக் கணக்கில் வைத்துக் கொள்ளாமல் பார்ம் அவுட்டாகி விட்டார் என்று பேசுகின்றனர். அந்த அளவுக்கு தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கி 70 சதங்களை அடித்த விராட் கோலிக்கு எவ்வளவோ முயற்சித்தும் கடுமையாக உழைத்தும் 71-வது சதம் மட்டும் வரமாட்டேன் என்பது போல் 3 வருடங்களாக அடம் பிடித்து வருகிறது.
இன்ஸ்டாவில் இரட்டை சதம்:
ஆனாலும் ஏற்கனவே அவர் அடித்த ரன்களும் சதங்களும் காலத்திற்கும் நின்று பேசும் என்ற வகையில் அவரின் புகழ் இப்போதும் ரசிகர்களிடம் கொஞ்சமும் குறையாமல் காணப்படுகிறது. மேலும் இந்த நவீன யுகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்ற நிலையில் விராட் கோலியை போன்ற கிரிக்கெட் மற்றும் சினிமா நட்சத்திரங்களை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். அதிலும் புகைப்படங்களை மையமாகக் கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமக்கு மிகவும் பிடித்த உடல் பயிற்சி செய்யும் கூடங்களில் எடுக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விராட் கோலி பதிவிடுவது வழக்கமான ஒன்றாகும்.
எனவே அவரைப் போன்ற உடற்கட்டை பெற வேண்டும் என்பதற்காகவே பல கோடி ரசிகர்கள் அவரைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் களத்தில் விளையாடும் புகைப்படங்கள், தனது மனைவி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் என இந்தியாவில் உட்சபட்ச நட்சத்திரமாக கருதப்படும் அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல வருடங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வரும் அவரை தற்போது 20 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.
The face of WORLD CRICKET 🏏❤️#ViratKohli pic.twitter.com/cpiFVrUehS
— Shivam 🚩 (@shiv_0769) June 7, 2022
Athletes to have 200M+ followers on Insta:
The 🐐ed List:
• Cristiano Ronaldo
• Lionel Messi
• Virat KohliEnd of the list.
2 footballers and a face of the modern day cricket.#ViratKohli𓃵 pic.twitter.com/tOieBYkZlZ— Mani Viratfied 👑❤️ (@MViratfied) June 7, 2022
1. இதன் வாயிலாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் 20 கோடி ரசிகர்களை கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி என இந்தியா முதல் உலகத்தில் இருக்கும் அத்தனை இதர கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் இவருக்குத்தான் ரசிகர்கள் ஏராளமாக காணப்படுகின்றனர்.
இதையும் படிங்க : உலக மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் பெருமை – லேடி சச்சினாக மித்தாலி ராஜ் படைத்த சாதனைகளின் பட்டியல்
2. சொல்லப்போனால் ஒட்டுமொத்த உலகிலேயே விளையாட்டு பிரிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய 2 கால்பந்து ஜாம்பவான்களை தொடர்ந்து 20 கோடி ரசிகர்களை கொண்டுள்ள 3-வது விளையாட்டு வீரர் என்ற மாபெரும் பெருமைக்கும் விராட் கோலி சொந்தமாகியுள்ளார்.