உலக மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் பெருமை – லேடி சச்சினாக மித்தாலி ராஜ் படைத்த சாதனைகளின் பட்டியல்

Mithali
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர அனுபவ வீராங்கனை மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் வகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று தனது 39-வது வயதில் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1982இல் பிறந்த இவர் கிரிக்கெட் மீதான காதலால் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவிற்காக தனது 17 வயதிலேயே கடந்த 1999இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். மகளிர் கிரிக்கெட்டின் மகத்தான நாயகி அவதரித்து விட்டேன் என்பது போல் அந்த முதல் போட்டியிலேயே அட்டகாசமான சதமடித்த அவர் அடுத்த ஒருசில வருடங்களிலேயே இந்திய பேட்டிங் துறையில் முதுகெலும்பாக உருவெடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார்.

2002இல் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமாகி தனது அபார திறமையால் ரன் மழை பொழிந்த அவர் 2005இல் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். அந்த வருடம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் தலைமையில் இறுதிப் போட்டி வரை சென்ற இந்தியா இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்தியாவுக்காக களமிறங்கிய அத்தனை போட்டிகளிலும் முடிந்த அளவுக்கு அபாரமாக பேட்டிங் செய்த அவர் பல சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அதேபோல் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீட் கவூர் போன்ற இளம் வீராங்கனைகளுக்கு தேவையான வாய்ப்பையும் ஆதரவையும் அளித்து வருங்கால இந்தியாவை தரமானதாக அமைத்த பெருமையில் பெரும்பங்கு அவரை சேரும்.

- Advertisement -

லேடி சச்சின்:
இந்தியா போன்ற மகளிருக்கு குறைந்த உரிமை கொண்ட நாட்டில் கடந்த பல வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த ஜாம்பவான் வீராங்கனைகளை விட சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றிக்காக பாடுபட்ட அவர் இந்தியாவில் மறைந்துகிடக்கும் பல இளம் வீராங்கனைகளுக்கும் பெண்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

இந்திய ஆடவர் கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எப்படி 16 வயதில் அறிமுகமாகி உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை பந்தாடி இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருந்து அதை தனது தோளில் சுமந்து 24 வருடங்கள் காப்பாற்றி பேட்டிங்கில் உள்ள அத்தனை சாதனைகளையும் படைத்தரோ அதேபோல்தான் மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் என்று சுருக்கமாகக் கூறலாம். அதனால் அவரை லேடி சச்சின் என்று ரசிகர்கள் அழைக்கும் நிலையில் அதை வெறும் வார்த்தைகளால் கூறாமல் புள்ளி விவரங்களோடு பார்ப்போம் வாங்க.

- Advertisement -

1. முதலில் 1999இல் தனது 16 வயது 205 நாட்களில் தனது முதல் அறிமுக போட்டியிலேயே சதமடித்த அவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் சதமடித்த வீராங்கனை என்ற சாதனையை இன்னமும் படைத்துள்ளார்.

2. 1999 – 2022 வரை 22 வருடங்கள் 274 நாட்கள் இந்தியாவுக்காக விளையாடிய இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வருடங்கள் விளையாடிய வீராங்கனை என்ற உலக சாதனை படைத்துள்ளார். வேறு யாரும் 20 வருடங்கள் கூட தொடர்ந்து விளையாடியது கிடையாது.

- Advertisement -

3. 7805 ரன்களை குவித்துள்ள அவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக உலக சாதனை படைத்துள்ளார். 2-வது வீராங்கனை : சார்லஸ் எட்வர்ட்ஸ், 5992 ரன்கள்.

4. 71 அரைச் சதங்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த வீராங்கனையாக உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

5. அதைவிட 10868 ரன்களுடன் (டெஸ்ட், ஒருநாள், டி20) ஒட்டுமொத்த மகளிர் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக உலக சாதனை படைத்துள்ளார்.

6. மேலும் 232 போட்டிகளுடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை, 333 போட்டிகளுடன் ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை ஆகிய இரட்டை உலக சாதனையும் படைத்துள்ளார்.

7. அதேபோல் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக உலக கோப்பைகளில் (6 உலககோப்பைகள்) விளையாடிய வீராங்கனை என்ற சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார்.

8. 1321 ரன்களுடன் உலக கோப்பைகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை மற்றும் ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.

9. மேலும் 19 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த அவர் மகளிர் டெஸ்ட் போட்டிகளில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீராங்கனையாக இன்னும் உலக சாதனை படைத்துள்ளார்.

10. 2019இல் ஓய்வு பெற்றாலும் 2364 ரன்களுடன் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனையாக இன்னும் சாதனை படைத்துள்ளார்.

11. 7 சதங்களுடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார். இதுபோல இந்திய அளவில் ஏகப்பட்ட சாதனைகளை மிதாலி ராஜ் தனது பெயரில் வைத்துள்ளார்.

இதையும் படிங்க : பிரியா மனதுடன் விடை பெற்றார் – இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சிங்கப்பெண் மிதாலி ராஜ் ! குவியும் வாழ்த்துக்கள்

கெளரவங்கள்:
1. 2003இல் விளையாட்டு துறையில் மிகச் சிறந்த விருதான அர்ஜுனா விருதையும் 2015இல் இந்தியாவின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.

2. மேலும் 2017இல் உலகப் புகழ்பெற்ற விஷ்டன் பத்திரிக்கையால் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட இவர் 2021இல் இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.

Advertisement