
ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் தலைநகர் டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி மைதானத்தில் ஜனவரி 30 ஆம் தேதி எல்லை குரூப் டி பிரிவில் உள்ள டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் விராட் கோலி 12 வருடங்கள் கழித்து டெல்லிக்காக களமிறங்கினார்.
டெல்லி அணிக்காக உள்ளூரில் விளையாடி 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். 26000+ ரன்கள் 81 சதங்கள் அடித்துள்ள அவர் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக ஒரு வருடத்தில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட அவர் தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கிறார்.
அதனால் 2012க்குப்பின் ரஞ்சிக் கோப்பையில் அவர் விளையாடும் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அம்மாநில வாரியம் இலவச அனுமதி கொடுத்துள்ளது. அதனால் இன்று அதிகாலை 5.00 மணிக்கே மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் நீண்ட தூரம் காத்திருந்து வந்தனர். அவர்களுக்கு ஆதார் கார்டு நகல் மற்றும் பெற்றுக் கொண்டு இலவச அனுமதி வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து ரயில்வேஸ் பேட்டிங்கை துவங்கியது. கொஞ்ச நேரத்திலேயே ஒரு ரசிகர் பாதுகாப்பை உடைத்துக்கொண்டு விராட் கோலியை சந்தித்து அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார். அவரை பாதுகாவலர்கள் அடித்து வெளியே இழுத்து செல்ல முயற்சித்தார்கள்.
அப்போது அவர்களை தடுத்த விராட் கோலி தன் ரசிகரை அடிக்காமல் பொறுமையாக அழைத்துச் செல்லுமாறு அன்பை காட்டினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கோலி, கோலி, ஆர்சிபி, ஆர்சிபி, கோலிக்கு பவுலிங் கொடுங்கள் என்று ரசிகர்கள் விதவிதமாக கோஷமிட்டு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்கிடையே பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணி 241 ரன்கள் போராடி எடுத்தது. அதிகபட்சமாக உபேந்திரா யாதவ் 95, கரண் சர்மா 50 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: 86க்கு ஆல் அவுட்.. ரோஹித் போனதுமே மிரட்டிய மும்பை.. மேகாலயா 153 வருட சாதனை.. தாக்கூர் ஹாட்ரிக் சாதனை
டெல்லிக்கு அதிகபட்சமாக நவ்தீப் ஷைனி, சுமித் மாதூர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடும் டெல்லி முதல் நாள் முடிவில் 41-1 ரன்கள் எடுத்துள்ளது. மொத்தத்தில் விராட் கோலி விளையாடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக டெல்லி மைதானத்தில் 15748 ரசிகர்கள் கூடினார்கள். மேலும் ஆரம்பத்தில் ஒளிபரப்புக்கு திட்டமிடப்படாத இப்போட்டியை விராட் கோலி ஸ்பெஷல் ஒளிபரப்பில் 94 லட்சம் ரசிகர்கள் முதல் நாளில் நேரலையில் பார்த்துள்ளார்கள். அந்த வகையில் விராட் கோலி டெல்லி மைதானத்தை திருவிழாவாக மாற்றினார் என்று சொல்லலாம். நாளை விராட் கோலி பேட்டிங் செய்வதைப் பார்க்க இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.