இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த வேளையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட இருக்கின்றனர். ஏற்கனவே அவர்கள் இருவரும் வெளியிட்டிருந்த அறிக்கையில் : 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை இந்திய அணியில் விளையாட விரும்புவதாக தெரிவித்து இருந்ததால் அந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இருவரும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? :
இந்திய அணி தற்போது இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்று நாடு திரும்பியதை அடுத்து செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. இம்முறை ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் பார்மெட்டில் நடைபெற இருப்பதால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அந்த தொடரில் விளையாட மாட்டார்கள்.
இந்நிலையில் மீண்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் அதிகாரப்பூர்வமாக அவர்கள் இருவரும் இந்திய ஒருநாள் அணிக்கு எப்போது மீண்டும் விளையாடுவார்கள்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அடுத்ததாக அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருக்கின்றனர். அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் நகரில் முதலாவது ஒருநாள் போட்டியும், அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியும், அக்டோபர் 25-ஆம் தேதி சிட்னி நகரில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் தான் மீண்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து விளையாட இருக்கின்றனர். கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக விளையாடியிருந்த அவர்கள் இருவரும் மீண்டும் அக்டோபர் 19-ஆம் தேதி இந்திய அணிக்கு திரும்புகின்றனர்.
இதையும் படிங்க : சாய் சுதர்சனுக்கு இதை மட்டும் பண்ணுங்க.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவாரு – ஸ்டூவர்ட் பிராடு கருத்து
2027 உலக கோப்பை தொடரில் அவர்கள் இருவரும் விளையாட விரும்பினாலும் அந்த உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதனாலும் அதற்குள் அவர்கள் இருவரும் 40 வயதை நெருங்குவார்கள் என்பதனாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கழட்டி விடப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



