இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் 700 ரன்களுக்கு மேல் குவித்து இந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார். அவரது நேர்த்தியான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளும் இருந்து வந்தன.
வருங்காலத்தில் சாய் சுதர்சன் அசத்துவார் : ஸ்டூவர்ட் பிராடு
அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியிலும் அவருக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. மிகச் சிறப்பான பேட்டிங் டெக்னிக்கை வைத்திருக்கும் அவர் இந்த வாய்ப்பினை கெட்டியாக பிடித்துக் கொண்டு நட்சத்திர வீரராக தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு அரை சதத்துடன் 140 ரன்களை மட்டுமே அடித்து சுமாரான செயல்பாட்டையே வெளிப்படுத்தினார். அதனால் அவரது இந்த ஆட்டத்தின் மீது சில விமர்சனங்களும் இருந்து வருகின்றது.
ஆனாலும் கடினமான இங்கிலாந்து மைதானங்களில் அறிமுக தொடரில் இந்த செயல்பாடு போதுமான ஒன்றுதான் என்று அவருக்கு ஒரு சிலரது மத்தியில் ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடும் தமிழக வீரரான சாய் சுதர்சனை ஆதரித்து ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை வைத்து மட்டுமே சாய் சுதர்சனை எடை போடக்கூடாது. இந்திய அணியில் இன்னும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகள் வரை தொடர்ச்சியாக அவருக்கு மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் இந்திய அணிக்காக அவர் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்.
இதையும் படிங்க : இந்தியாவை சமாளிச்ச இங்கிலாந்தை 5 – 0ன்னு ஆஷஸ்ல ஆஸி தெறிக்க விடும்.. 2 காரணம் இதான்.. மெக்ராத் கணிப்பு
அதோடு நீங்கள் அவர் மீது வைக்கும் நம்பிக்கையை அவர் இருமடங்காக திருப்பிக் கொடுப்பார் என சாய் சுதர்சன் குறித்து ஸ்டூவர்ட் பிராடு கூறினார். இங்கிலாந்து தொடர் முடிந்ததை அடுத்து எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியிலும் சாய் சுதர்சன் இடம்பிடிப்பார் என்ற தகவல்களும் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.



