உள்ளூர் கிரிக்கெட்டில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? விராட் கோலி – ரோஹித் சர்மாவின் புள்ளிவிவரம், சதங்கள் அலசல்

- Advertisement -

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5 முதல் நடைபெற உள்ளது. அதில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பரிந்துரைப்படி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாட உள்ளதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியானது. இருப்பினும் ஏற்கனவே மிகப்பெரிய அனுபவத்தை கொண்ட சீனியர் வீரர்களான அவர்கள் அதில் விளையாடப் போவதில்லை என்ற செய்திகள் தற்போது காணப்படுகின்றன.

அதனால் 14 வருடங்கள் கழித்து விராட் கோலியும் 8 வருடங்கள் கழித்து ரோஹித் சர்மாவும் துலீப் கோப்பையில் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் கடந்த 10 வருடங்களாக மிகச் சிறப்பாக விளையாடி சிறந்த பேட்ஸ்மேன்களாக சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டின் அடித்தளமான ரஞ்சிக்கோப்பையில் அவர்களுடைய செயல்பாடுகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

உள்ளூர் செயல்பாடுகள்:
கடந்த 2006 – 07 ரஞ்சிக் கோப்பையில் விராட் கோலி டெல்லி அணிக்காகவும் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் ஒன்றாக விளையாடத் துவங்கினர். அதில் தனது முதல் தொடரிலேயே அட்டகாசமாக விளையாடிய ரோஹித் சர்மா 531 ரன்களை 48.07 என்ற சராசரியில் குவித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 2007 – 08 சீசனில் சுமாராக விளையாடிய அவர் 5 போட்டிகளில் 191 ரன்களை 27.28 சராசரியில் மட்டுமே எடுத்தார்.

இருப்பினும் அதன் பின் 2008 – 09, 2009 – 10, 2010 – 11 சீசன்களில் மீண்டும் அபாரமாக விளையாடிய அவர் முறையே 747, 537, 732 ரன்களை 74.70, 87.83, 122 சராசரியில் குவித்து அசத்தினார். அதே போல 2011 – 12, 2012 – 13 சீசன்களில் 1000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் 2014 – 15 வரை விளையாடாத அவர் கடைசியாக 2015 – 16 ரஞ்சிக்கோப்பையில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி சதமடித்தார்.

- Advertisement -

மொத்தத்தில் 42 ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா 14 சதங்கள் உட்பட 3892 ரன்களை 72.07 சராசரியில் குவித்துள்ளார். மறுபுறம் டெல்லி அணிக்காக முதல் வருடத்திலேயே சுமாராக விளையாடிய விராட் கோலி 174 ரன்களை மட்டுமே எடுத்தார். இருப்பினும் 2009 – 10 சீசனில் சிறப்பாக விளையாடிய அவர் 374 ரன்களை 93.50 சராசரியில் குவித்தார். அப்படியே 2010 – 11 சீசனில் 339 ரன்கள் குவித்த அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: தரமான பவுலரா முன்னேறிட்டேன்.. இந்திய அணியில் கம்பேக் கொடுக்க இதை செய்யப் போறேன்.. உம்ரான் மாலிக்

அதனால் கடைசியாக 2012 – 13 ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அவர் 57 ரன்கள் அடித்தார். மொத்தத்தில் 23 ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விராட் கோலி 5 சதங்களுடன் 1574 ரன்களை 50.77 சராசரியில் எடுத்துள்ளார். எனவே இருவரையும் ஒப்பிடும் போது 50.77 சராசரியை கொண்டுள்ள விராட் கோலியை விட 72.07 சராசரியை கொண்டுள்ள ரோகித் சர்மா ரஞ்சிக்கோப்பையில் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டுள்ளார். அத்துடன் 5 சதங்கள் அடித்துள்ள விராட் கோலியை விட ரோஹித் 14 சதங்களுடன் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement