
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிறைவு பெற்ற ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த மாதம் நடைபெற்ற அந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் வெற்றி கண்டது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்றது.
அந்த வெற்றியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர். அதில் விராட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஓய்வு இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அந்த இருவரும் டாப் 2 இடங்களை பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
ஜாம்பவான்கள் போல:
அந்தளவுக்கு கடந்த 10 வருடங்களாக இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகவும் பேட்டிங் துறையின் முதுகெலும்பாகவும் செயல்பட்ட அவர்கள் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். இருப்பினும் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர்கள் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனியை போல விராட் கோலி, ரோஹித் சர்மாவின் இடத்தையும் இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐஏஎன்எஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விராட் மற்றும் ரோஹித் ஆகியோரின் இடத்தை யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது”
“அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வேலையாட்கள். தற்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுள்ளனர். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தமக்கென்று தரத்தை உருவாக்கிய விராட் கோலியை இந்தியா கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிஸ் செய்யும். அந்த இருவருமே சச்சின் தோனியை போன்றவர்கள்”
இதையும் படிங்க: விராட் கோலியை பாத்து அப்படி சொல்லாதீங்க.. 40 நிமிஷம் எப்படி போச்சுன்னே தெரியல.. மிஸ்ராவுக்கு சஷாங் பதிலடி
“அந்த இருவரின் இடத்தை யாரையும் வைத்து மாற்ற முடியாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விராட் கோலி மற்றும் ரோஹித் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். குறிப்பாக அந்த 2 தொடர்களிலும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று இப்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.